உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / மனதை கொள்ளை கொள்ளும் ஜரமதகு நீர்வீழ்ச்சி

மனதை கொள்ளை கொள்ளும் ஜரமதகு நீர்வீழ்ச்சி

மழைக்காலம் வந்தாலே, சுற்றுலா ஆர்வலர்களுக்கு செம குஷிதான். நீர்வீழ்ச்சிகளை தேடிச் செல்வர். நண்பர்கள், குடும்பத்துடன் சென்று, இயற்கையை ரசிப்பர். மழைக்காலத்தில் பார்க்க வேண்டிய இடங்களில், ஜரமதகு நீர்வீழ்ச்சியும் ஒன்று.இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சிகளில், ஷிவமொக்காவின் ஜோக் நீர்வீழ்ச்சியும் ஒன்று. இதே போன்ற நீர்வீழ்ச்சி, பெங்களூரின் அருகில் உள்ள சிக்கபல்லாபூர் மாவட்டத்திலும் உள்ளது. சிக்கபல்லாபூர் மாவட்டத்தின், காடஞ்சஹள்ளி கிராமத்தில், வனப்பகுதியில் ஜரமதகு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.பசுமையான இயற்கை வளங்களுக்கு நடுவே உள்ளது. நீர்வீழ்ச்சியை காண புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஏன் என்றால், தீர்த்த தலங்களாக போற்றப்படும் பிரம்மகிரி, திவ்யகிரி, நந்தகிரி, ஸ்கந்த கிரி, விஷ்ணுகிரி ஆகிய ஐந்து மலைகளுக்கு நடுவே, ஜரமதகு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.அப்பகுதியில் இயற்கை அன்னை, அருளை வாரி வழங்கியுள்ளார் என்றால் மிகையில்லை. கண்களையும், மனதையும் மகிழ்வுக்கும் நீர்வீழ்ச்சி, 90 அடி உயரத்தில் இருந்து பாய்கிறது. இங்கு வந்தால் திரும்பிச் செல்ல மனம் வராது. சில நாட்களாவது, அங்கு தங்கியிருந்து இனிமையான உணர்வை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.இந்த நீர்வீழ்ச்சியை, சிக்கபல்லாபூரின் ஜோக் நீர்வீழ்ச்சி எனவும் அழைக்கின்றனர். பாறைகளின் இடுக்குகளில் தண்ணீர் பாய்ந்து வருவதை காண, அற்புதமான காட்சியாக இருக்கும். மழைக்காலம் மட்டுமல்ல விடுமுறை நாட்களில், பெங்களூரில் இருந்து அதிகமான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.நீர்வீழ்ச்சியை காண, அடர்த்தியான வனப்பகுதி சாலையில் நடந்து வர வேண்டும். மலையேற்றம் செல்ல தினமும் இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவ - மாணவியர் பெருமளவில் வருகின்றனர். பரபரப்பான நகர வாழ்க்கையால் வெறுப்படைந்தவர்கள், ஜரமதகு நீர்வீழ்ச்சிக்கு வாருங்கள். பசுமையான சூழலில் சிறிது நேரம் பொழுது போக்கினால், புத்துணர்ச்சியுடன் வீடு திரும்பலாம்.

எப்படி செல்வது

பெங்களூரில் இருந்து, 90 கி.மீ., சிக்கபல்லாபூரில் இருந்து, 12 கி.மீ., தொலைவில் ஜரமதகு நீர்வீழ்ச்சி உள்ளது. கர்நாடகாவின் அனைத்து நகரங்களில் இருந்தும், சிக்கபல்லாபூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ்கள், வாடகை வாகன வசதியும் உள்ளது. விமானத்தில் வருவோர், பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, பஸ்கள் அல்லது வாடகை கார்களில், சிக்கபல்லாபூருக்கு செல்லலாம்.அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்: நந்தி மலை, குடிபன்டே கோட்டை, போக நந்தீஸ்வரா கோவில். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி