உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / சுற்றுலா பயணியரை ஈர்க்கிறது கதக்கின் அதிசய கிணறு

சுற்றுலா பயணியரை ஈர்க்கிறது கதக்கின் அதிசய கிணறு

கர்நாடகாவை பல்வேறு மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். அவர்கள், சிறப்பான ஆட்சியை விவரிக்கும் அடையாளங்களை விட்டு சென்றுள்ளனர். இதில் ஹொய்சாளர்களும் முக்கியமானவர் கள். வரலாற்றில் இவர்களுக்கும் தனியிடம் உண்டு. கர்நாடகாவில் 10ம் நுாற்றாண்டு முதல் 13ம் நுாற்றாண்டு வரை ஹொய்சாளர்களின் செல்வாக்கு அதிகம் இருந்தது. இவர்களின் ஆட்சியில் அதிகமான கோவில்கள், கட்டடங்கள், நினைவு மண்டபங்கள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் இப்போதும் இவர்களின் ஆட்சி சிறப்புக்கு, சாட்சிகளாக இருக்கின்றன. இவற்றில் கதக் அருகில் உள்ள அதிசய கிணறும் அடக்கம். வரலாற்று சின்னம் கதக் நகரின் தம்பளா கிராமத்தின் தொட்ட பசப்பா கோவிலில் இருந்து, 280 மீட்டர் தொலைவில் கிணறு அமைந்துள்ளது. வரலாற்று சின்னமாக விளங்கும் இந்த கிணறு புண்ணிய தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இன்றைய கட்டட கலை வல்லுநர்களுக்கு சவால் விடும் வகையில் அன்றைய காலத்தில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அற்புதமான கலை வடிவத்துடன் அந்த கால சிற்பிகளின் கை வண்ணம் வியக்க வைக்கிறது. அற்புத கிணற்றின் கலை வடிவத்தை காணவே, சுற்றுலா பயணியர் குவிகின்றனர். கிணற்றை சுற்றிலும் 21 குகைகள் அமைந்துள்ளன. இன்றைக்கும் குகைகள் நல்ல நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜெயின் ரிஷிகள், முனிவர்கள் இந்த கிணற்றில் நீராடிய பின், சுற்றிலும் உள்ள குகைக்குள் சென்று தவம் செய்ததாக ஐதீகம். இதனால் கிணற்றுக்கு, 'தவம் கிணறு' என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு குகையில் ஒருவர் மட்டுமே அமர முடியும். இங்கு வரும் சுற்றுலா பயணியர், குகையில் அமர்ந்து மணிக்கணக்கில் தியானம் செய்கின்றனர். விருந்தினர்கள் தம்பளாவில் வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளுக்கு வரும் விருந்தினர்களை, இந்த கிணற்றுக்கு அழைத்து சென்று காட்டுகின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பெருமளவில் வருகின்றனர். கதக்கின் விக்டோரியா ஏரி மற்றும் தம்பளாவில் உள்ள தொட்டபசப்பா கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணியர், தவம் கிணற்றுக்கு வருகின்றனர். கிணற்றில் நீரின் அளவை கவனித்து, விக்டோரியா ஏரியின் நீர்மட்டத்தை அப்பகுதியினர் தெரிந்து கொள்கின்றனராம். இதை வைத்து விவசாயிகள் பயிரிடுகின்றனர். மக்கள், கிணற்றை தங்கள் ஊரின் பெருமையாக கருதுகின்றனர். வரலாற்று வல்லுநர்கள் கூறியதாவது : தம்பளாவின் புராதன கிணற்றை பார்த்து, நாங்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்தோம். இது 12ம் நுாற்றாண்டுக்கும் முந்தையதாகும். ஜெயின் சன்னியாசிகள், இங்குள்ள குகைகளில் தியானம் செய்துள்ளனர். மிகவும் அற்புதமான கலை நயத்து டன் அமைத்துள்ளனர். சுற்றிலும் கற்களை பொருத்தி கலை வடிவம் கொடுத்துள்ளனர். அன்றைய சிற்பிகளின் கைத்திறனை வியக்காமல் இருக்க முடியாது. கிணற்றை சுற்றிலும் அழகான மண்டபங்கள் உள்ளன. புராதன பிரசித்தி பெற்ற கிணற்றை பாதுகாக்க, தொல்பொருள் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை பாதுகாத்து அடுத்த சந்ததியினர் தெரிந்து கொள்ள, வழி செய்ய வேண்டும். இங்குள்ள குகைகள் முட்வேலியால் சூழப்பட்டுள்ளன. இதை அகற்ற வேண்டும். இவ்வாறு கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ