| ADDED : டிச 25, 2025 07:11 AM
- நமது நிருபர் -கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை காலம் முடிந்து தற்போது குளிர்காலம் துவங்கி உள்ளது. பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல இடங்களில் பகல் நேரங்களில் அடர்ந்த பனிமூட்டம் உள்ளது. குறிப்பாக மலைநாடு மாவட்டங்கள் என்று அழைக்கப்படும் சிக்கமகளூரு, ஷிவமொக்கா, குடகு, ஹாசன் மாவட்டங்களில் உள்ள டிரெக்கிங் தலங்களில் பனிமூட்டம் படர்ந்து செல்வதுடன் சில்லென காற்று வீசுகிறது. ஜீப் வடிவமைப்பு ஹாசனில் இருந்து மங்களூரு செல் லும் வழியில் உள்ள பிசிலே காட் வனப்பகுதி சாலை முழுக்க, முழுக்க பச்சை, பசேலென மாறி உள்ளது. இந்த சாலையில் உள்ள பட்ல பெட்டா சுற்றுலா பயணியரின் சொர்க்க பூமியாக மாறி உள்ளது. சக்லேஸ்பூரில் இருந்து 43 கி.மீ., துாரத்தில் உள்ள ஹெத்துார் என்ற கிராமத்தில், பட்ல பெட்டா மலை இருக்கிறது. சக்லேஸ்பூரில் இருந்து மங்களூரு செல்லும் சாலையில் செல்ல வேண்டும். ஹெத்துாரில் பெட்டா துவங்கும் இடத்தில் இருந்து மலை பகுதிக்கு திறந்த ஜீப்பில் அழைத்து செல்கின்றனர். இந்த பாதை முழுதும் கரடுமுரடாக காட்சி அளிக்கிறது. இரு பக்கமும் பசுமை, நடுவில் குலுங்கி, குலுங்கி செல்லும் ஜீப்பில் பயணிப்பது புதிய அனுபவமாக இருக்கும். பயணம் 3 கி.மீ., துாரம் என்றாலும், அங்கு செல்ல 30 முதல் 40 நிமிடங்கள் ஆகிறது. பசுமையின் மணம் இந்த பாதையில் பயணிக்க ஏற்றவாறு, ஜீப்பை வடிவமைத்து உள்ளனர். சொந்த வாகனத்தில் செல்வது சற்று கடினமாக உள்ளது. ஆனாலும் சிலர், கரடுமுரடான சாலையில் பைக்கில் சென்று சாகசம் செய்கின்றனர். ஜீப்பில் இருந்து இறங்கி பார்க்கும் போது, கண்ணுக்கு எட்டிய துாரம் வரை பசுமை மட்டுமே நமது கண் முன்பு நிற்கும். சில்லென வீசும் காற்றும், பசுமையின் மணமும் சுற்றுலா பயணியர் மனதை மயக்குகிறது. பசுமை போர்த்திய இடத்தில் நின்று புகைப்படம் எடுத்து, சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த இடத்திற்கு தனியாக செல்வதை விட, குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வது புதிய அனுபவத்தையும், மறக்க முடியாத நிகழ்வுகளையும் கொடுக்கும்.