மேலும் செய்திகள்
பூலோக சொர்க்கம் ஸ்கந்தகிரி
18-Sep-2025
தட்சிணகன்னடா மாவட்டம், கர்நாடகாவின், கடலோர மாவட்டமாகும். அழகான கடற்கரைகள், மலைகள், நீர் வீழ்ச்சிகள், புராதன கோவில்கள், சுற்றுலா தலங்கள் உள்ளன. சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கும் இடங்கள் ஏராளம். இதில், பசுமையான ராணிபுரா மலையும் ஒன்றாகும். மழை குறைந்ததால், பலரும் சுற்றுலா தலங்களுக்கு படை எடுக்கின்றனர். இளைஞர்கள், இளம்பெண்கள் மலையேற்றம் செல்வதில், ஆர்வம் காட்டுகின்றனர். இயற்கையை ரசிப்பதுடன், மலையேறி சாகசம் செய்ய விரும்புவோர், ராணிபுரா மலைக்கு வாருங்கள். சொர்க்கத்துக்கு வந்த உணர்வு ஏற்படும். இது கேரளாவின், காசர்கோடுவில் இருந்தாலும், கர்நாடகாவில் இருந்து, அதிகமான சுற்றுலா பயணியர், சாகச பிரியர்கள் செல்கின்றனர். தீபாவளி விடுமுறைக்கு, சுற்றுலா செல்ல திட்டமிட்டால், ராணிபுரா மலையை தேர்வு செய்யலாம். கடல் மட்டத்தில் இருந்து, 3,438 அடி உயரத்தில் உள்ள இம்மலை, சுற்றுலா பயணியரை கைவீசி அழைக்கிறது. மலை அடிவாரத்தில் இருந்து, 5 கி.மீ., நடந்து மலையேறினால், அற்புதமான காட்சிகளை காணலாம். மனதுக்கு இதமளிப்பதுடன், உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். மலை உச்சியை அடைந்தால் நடந்து வந்த களைப்பும், அலுப்பும் காணாமல் போகும். உடலை வருடிச் செல்லும் குளிர்ச்சியான காற்றை அனுபவிக்கலாம். கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, பச்சை நிற பட்டுச்சேலையை விரித்து வைத்தது போன்றிருக்கும். வளைந்து, நெளிந்து ஓடும் ஆறுகளும் மனதை கொள்ளை கொள்ளும். இதற்காகவே இங்கு சுற்றுலா பயணியர் குவிகின்றனர். மலையேற்றத்துக்கும் அதிகமானோர் வருகின்றனர்.
கர்நாடகா மற்றும் கேரள எல்லையில், ராணிபுரா மலை உள்ளது. மங்களூரில் இருந்து 105 கி.மீ., பெங்களூரில் இருந்து, 327 கி.மீ., மைசூரில் இருந்து 193 கி.மீ., தொலைவில், ராணிபுரா மலை உள்ளது. முக்கிய நகரங்களில் இருந்தும், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. தனியார் வாகன வசதியும் உள்ளது. மலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைக்கு செல்லும் வழியில் கடைகள் ஏதும் இல்லை. எனவே மலையேற்றம் செய்வோர், சிற்றுண்டி, குடிநீர் கொண்டு செல்ல வேண்டும். அனுமதி நேரம்: காலை 8:00 முதல், மாலை 5:00 மணி வரை. ஆனால் நுழைவு டிக்கெட் கொடுப்பது, மதியம் 3:00 மணியுடன் முடிந்துவிடும். அதற்கு முன் டிக்கெட் எடுத்தவர்கள் மலையேறலாம். - நமது நிருபர் -
18-Sep-2025