உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / குடும்ப சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் சோம்வார்பேட்

குடும்ப சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் சோம்வார்பேட்

சுற்றுலா என்றவுடன் வெளிமாநிலங்களுக்கு செல்வதையே பெரும்பாலும் சுற்றுலாவாக நினைக்கின்றனர். ஆனால், கர்நாடகாவிலே சுற்றுலாவிற்கு ஏற்ற நிறைய இடங்கள் உள்ளன. இதில் ஒன்று தான் குடகில் உள்ள சோம்வார்பேட். குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடங்களில் ஒன்றாய் திகழ்கிறது. குடகு மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம் தான் சோம்வார்பேட். எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. பார்ப்பதற்கே ஆசையாய் இருக்கும் பகுதியில் தங்கி சுற்றி திரிந்தால் எப்படி இருக்கும் என யோசித்து பாருங்கள். இங்கு கோல்ப் மைதானம், அணை, அருவி போன்ற அனைத்தும் இருக்கிறது.ஏரி, குட்டைகள், மரங்கள், பறவைகளால் நிறைந்து உள்ளது. இங்கு உள்ள மக்கள் அனைவரும் அன்பாகவும், பாசமாகவும் பழக கூடியவர்கள். இங்கு ஏரி, குட்டை போன்ற பல நீர்நிலைகள் உள்ளன. இதனை ரசிப்பதற்கு ஏதுவான வகையில் அமர்வதற்கு கட்டைகள் கட்டப்பட்டு உள்ளன. குறிப்பாக, இதன் அருகில் உள்ள மல்லாலி அருவி பார்ப்பதற்கே அழகாய் உள்ளது.அருவியின் உயரம் அதிகமாக உள்ளதால் தண்ணீர் மேகத்தில் இருந்து வருவது போல காட்சி அளிக்கிறது. இந்த அருவியில் குளிப்பதற்காகவே, ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணியர் தினமும் வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வருவோரின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. அருவியில் குளித்துவிட்டு, அங்கிருந்து சிறிது துாரத்தில் உள்ள கோல்ப் விளையாட்டு மைதானத்திற்கு செல்லலாம். விளையாட்டு மைதானம் செல்லும் வழி முழுதும் மரங்களாகவே காட்சி அளிக்கின்றன. இதனால், அவ்வழியாக செல்லும்போது நம்மை அறியாமலே மனதில் ஒரு புத்துணர்ச்சி எழுகிறது.கோல்ப் மைதானத்தில் நீங்கள் விளையாடவும், விளையாட்டை பார்க்கவும் செய்யலாம். மைதானத்தில் உள்ள கடையில் கோல்ப் விளையாட்டுக்கான பொருட்களை வாங்கலாம். மைதானத்தில் உள்ள புல்தரையில் கூட்டம், கூட்டமாக குடும்பங்கள் உட்கார்ந்து உணவு சாப்பிட்டு மகிழ்வதை பார்க்கலாம். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் அமர்ந்து சிறிது நேரம் மனம் விட்டு உரையாடுவதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது. சோம்வார்பேட்டில் உள்ள ஹட்கூர் எனும் கிராமத்தில் ஹேரங்கி நீர்த்தேக்கம் உள்ளது. இது, காவிரியின் துணை நதியான ஹேரங்கி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அணைக்கட்டு, இன்றும் பார்ப்பதற்கு புதிது போலவே காட்சி அளிக்கிறது. இந்த அணையை சுற்றி பார்ப்பதற்கு அனுமதி உள்ளது. 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ஐந்து ரூபாயும், பெரியவர்களுக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

எப்படி செல்வது?

பஸ்: பெங்களூரில் இருந்து சோம்வார்பேட்டைக்கு நேரடி பஸ் வசதி உள்ளது. ஏழு மணி நேரத்தில் சென்று அடையலாம்.ரயில்: மெஜஸ்டிக் ரயில் நிலையத்தில் இருந்து மடிக்கேரி ரயில் நிலையத்திற்கு செல்லலாம். பின், அங்கிருந்து பஸ், டாக்சி மூலம் சோம்வார்பேட்டையை அடையலாம். -- நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை