உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா /  மனதை மயக்கும் சிரி கபே

 மனதை மயக்கும் சிரி கபே

சிக்கமகளூரு என்றால், சுற்றுலா பயணியருக்கு பேவரிட். விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள் வந்தால் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர், சிக்கமகளூரில் குவிவதை காணலாம். இயற்கை வளங்கள் கொட்டி கிடக்கும் மாவட்டம். சாகச பிரியர்கள் விரும்பும் மலைகள், பசுமையான வனப்பகுதிகள், மனதை மயக்கும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்துள்ளன. இத்தகைய இடங்களில் பொழுதுபோக்குவது, அற்புதமான அனுபவமாகும். இதை அனுபவிக்க குடும்பத்துடன், நண்பர்களுடன் வருகின்றனர். போட்டோ, செல்பி, வீடியோ எடுத்து மகிழ்கின்றனர். சுற்றுலா பயணியர் விரும்பும் இடங்களில், 'சிரி கபே' ஒன்றாகும். இது தனியாருக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது. நுழைவாசலில் இயற்கை கன்னி படுத்திருக்கும் வகையில் பூக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண் சிற்பம் மக்களை தன் வசம் சுண்டி இழுக்கிறது. இந்த ரெஸ்டாரென்ட்டுக்கு தானாகவே கால்கள் செல்லும். இங்கு வரும் சுற்றுலா பயணியர், சிற்பம் முன்பாக நின்று செல்பி எடுத்துக் கொள்கின்றனர். புத்தாண்டு, பண்டிகைகள், விடுமுறை நாட்களில் சிக்கமகளூருக்கு வரும் சுற்றுலா பயணியர், 'சிரி கெபே' செல்ல மறப்பது இல்லை. குழந்தைகளை விளையாட விட்டு விட்டு, பெண் சிற்பத்தை ரசித்தபடி வீடியோ, போட்டோ, செல்பி எடுப்பதை காணலாம். இயற்கை சூழ்ந்துள்ள இடத்தில், சிரி கபே உள்ளதால், சுற்றுலா பயணியர் அதிகம் விரும்புகின்றனர். காலை முதல் மாலை வரை விளையாடி பொழுது போக்கிவிட்டு, சுவையான காபி அருந்தி விட்டு மன மகிழ்ச்சியோடு செல்கின்றனர். இங்கு காபி மிகவும் சுவையாக இருக்கும். எப்படி செல்வது? சிக்கமகளூரில் இருந்து, 5 கி.மீ., தொலைவில் சிரி கபே உள்ளது. முல்லய்யன கிரிக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ளது. பெங்களூரில் இருந்து 241 கி.மீ., மங்களூரில் இருந்து, 148 கி.மீ., மைசூரில் இருந்து 171 கி.மீ., தொலைவில் சிக்கமகளூரு உள்ளது. அனைத்து நகரங்களில் இருந்தும், சிக்கமகளூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ்கள், வாடகை வாகனங்கள் இயங்குகின்றன. பஸ் அல்லது ரயிலில் வந்திறங்கி, வாடகை வாகனத்தில் சிரி கபே செல்லலாம். நேரம்: காலை 8:00 முதல், இரவு 10:00 மணி வரை. தொடர்பு எண்: 99643 38835 அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்: முல்லய்யன கிரி, பாபா புடன்கிரி, பத்ரா வன விலங்குகள் சரணாலயம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை