இயற்கை அழகை ரசித்தபடி மீன் பிடிக்க உகந்த இடம் வல்லனுார்
குடகு மாவட்டம் மடிகேரியில் இருந்து 28 கி.மீ., தொலைவில், துபாரே யானைகள் முகாம் அருகில் அமைந்து உள்ளது வல்லனுார். இங்கு மீன் பிடிப்பதற்கு மட்டுமின்றி, பறவைகளை பார்ப்பதற்கும் சிறந்த இடமாகும். ஒரு பக்கம் வனப்பகுதியும், மற்றொரு பக்கத்தில் காவிரி ஆறு ஓடுவதையும் காணலாம். இயற்கை ஆர்வலர்களுக்கும், மீன் பிரியர்களுக்கும் பிடித்த இடமாகும்.காவிரி ஆற்றங்கரையில் அழகான அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. கரையோரங்களில் பெரிய மணல் மேடுகள் உள்ளன. நதியும் ஆழமற்றதாக இருக்கும். இது நீரில் நீர்வாழ் உயிரினங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மெகா சைஸ் மீன்கள்
நாட்டில் மீன் பிடி தளங்களை கொண்ட இடங்களில் இதுவும் ஒன்றாகும். மீன்பிடி ஆர்வலர்கள், தங்கள் திறன்களை சோதிக்க ஏற்ற இடம். இங்கு மஹசீர், மாரல்ஸ், மேப்ஸ் ஆகிய பிரபலமான மீன்கள் உட்பட பல வகை மீன்கள் உள்ளன. மெகா சைஸ் மஹசீர், மாரல்ஸ் மீன்கள் துாண்டிலில் சிக்கும். இது தவிர, சில அரிய இனங்களும் அங்கு காணப்படுகின்றன.காலை நேரத்தில் இங்கு மீன் பிடிக்க செல்வது சரியான நேரமாகும். மீன் பிடிப்பு தவிர, சூரியன் அஸ்தமனத்தையும் இங்கிருந்து பார்க்கலாம்.மீன் பிடிக்க விரும்புவோர், முறைப்படி கூர்க் வனப்பகுதி ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். இதற்காக ஹோம் ஸ்டேக்கள் உதவுகின்றன. மீன் பிடிக்க வருவோர், சொந்தமாக மீன் பிடிக்கும் துாண்டிலை கொண்டுவர வேண்டும். அக்டோபரில் இருந்து மே மாதத்திற்குள் மீன் பிடிக்க உகுந்த நேரமாகும். இந்த காலகட்டத்தில் வானிலை சாதகமாகவும்; சுற்றுப்புறம் இயற்கை அழகு ரம்மியமாக இருக்கும்.மீன் பிடிக்கும் போது, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இங்கு பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லை. மழை காலத்தில் இங்கு செல்வது ஏற்றதல்ல. இக்காலகட்டத்தில் நதியில் அதிகளவு தண்ணீர் பாயும். இந்த நீரில் மீன் பிடிப்பதும் ஆபத்தானதாக மாறும்.காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மீன்பிடி ஆர்வலர்கள் வரலாம். அமைதியை விரும்பவும், மீன்பிடிக்கும் கலையில் ஈடுபடவும் போதுமான நேரத்தை வழங்குகிறது. பறவை கண்காணிப்பு
வல்லனுார் ஏராளமான பறவைகள் இனங்களுக்கு தாயகமாகும். வனப்பகுதியில் சில அரிய மற்றும் வெளிநாட்டு பறவைகளை காணலாம். பறவைகளை பார்ப்பதில் ஆர்வமுள்ளவர்கள், அதிகாலை நேரங்களில் ஏராளமான பறவைகளை பார்த்து மகிழலாம்.அதுபோன்று வல்லனுாரில் இருந்து நான்கு கி.மீ., துாரத்தில் துபாரே யானைகள் முகாம் அமைந்து உள்ளது. இங்கு யானைகளை, அருகில் இருந்தபடி கண்டு ரசிக்கலாம். யானைகளுக்கு உணவு வழங்கலாம். அதன் மீது அமர்ந்து பயணிக்கலாம்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து பஸ்சில் செல்வோர், குடகு மாவட்டம் மடிகேரி பஸ் நிலையத்தில் இறங்க வேண்டும் அங்கிருந்து 24. கி.மீ., தொலைவில் உள்ள வல்லனுாருக்கு தனியார் டாக்சியில் சென்றடையலாம். பெங்களூரு, மைசூரு, விராஜ்பேட் உட்பட பல நகரங்களில் இருந்தும் மடிகேரிக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சொந்த வாகனத்தில் செல்வோர், மைசூரு - மங்களூரு செல்லும் மாநில நெடுஞ்சாலை 88 வழியாக சென்றால், மடிகேரிக்கு செல்லலாம். ரயிலில் செல்வோர் மைசூரு அல்லது ஹாசன் ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து பஸ், தனியார் டாக்சியில் வல்லனுார் செல்லலாம். - நமது நிருபர் -