பிரிட்டனில் சிரிப்பு வாயு பயன்படுத்த தடை ஏன்?
பிரிட்டனில் சிரிப்பு வாயு என்றழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்சைடை போதை பொருளாக பயன்படுத்துவோருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க வகை செய்யும் புதிய சட்டம் அமலுக்கு வரவுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இளைஞர்கள் மத்தியில் சிரிப்பு வாயு என்றழைக்கப்படும் நிறமற்ற, மணமற்ற வாயுவான நைட்ரஸ் ஆக்சைடு, சட்டவிரோதமாக போதைப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அங்குள்ள பார்கள், இரவு விடுதிகளுக்கு வெளியே உலோக குப்பிகளில் அடைத்து விற்கப்படுகிறது. குறிப்பாக அங்கு கஞ்சாவுக்கு அடுத்தப்படியாக, 16 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில், சாதாரணமாக பயன்படுத்தப்படும் போதைப்பொருளாக மாறியுள்ளது. இதனை தொடர்ந்து சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு, அதிகரிக்கும் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த நைட்ரஸ் ஆக்சைடு பயன்பாட்டுக்கு தடை விதிக்க பிரிட்டன் அரசு முடிவு செய்தது. பிரிட்டன் கீழவையில் கொண்டு வரப்பட்ட தடை மசோதா, 404 எம்.பிக்கள் ஆதரவுடன் நிறைவேறியது.