கடவுளுடன் மனம் விட்டு பேசுங்கள் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
என்ன தான் பணம், பதவி இருந்தாலும், குடும்பத்தில் ஒருவர் குணக்குறைவுள்ளவராக இருந்தால் போதும். அந்த குடும்பத்துக்கு கெட்ட பெயர் வந்து விடும். இதுபோன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்கவும், கெட்ட குணங்களைக் கொண்டவர்கள் மனம் திருந்தவும், குடும்பத்தில் பெரியவர்கள் பல விரதங்களை அனுஷ்டிக்கிறார்கள். விரதம் இருந்தால் தான் சிவனருள் பெற முடியுமா என்றால், இல்லை என்கிறார் சம்பந்தர். “வீடு ஞானமும் வேண்டுதிரேல் விரதங்களால் வாடி ஞானமென்னாவதும் எந்தை வலஞ்சுழி நாடி ஞானசம்பந்தன் செந்தமிழ் கொண்டிசை பாடு ஞானம் வல்லாரடி சேர்வது ஞானமே” இந்தப் பாடலில் விரதம் இருந்து உடலை நோகடிப்பதால் மட்டும் நீ சிவனைப் பார்த்து விட முடியாது. மனம் அவரோடு ஒன்ற வேண்டும். அதற்கு தோத்திரங்களை வாயாரப் பாடி, மனதார நினைத்து வணங்க வேண்டும் என்கிறார். ஊர் மெச்ச வாழ வேண்டுமானால், விரதங்களை விட, மனதால் அனுஷ்டிக்கும் விரதமே உயர்ந்தது. இறைவனுடன் மனம் ஒன்றி பேசுங்கள். குறைகளைச் சொல்லுங்கள். தானாகவே சரியாகி விடும்.