திமுக திராவிட மாடல் மோசடி ஆட்சி என 'குடி'மகன்கள் குற்றச்சாட்டு
திமுக திராவிட மாடல் மோசடி ஆட்சி என குடிமகன்கள் குற்றச்சாட்டு | Chennai | fine of ₹10,000 for alcohol addicts சென்னை ஆதம்பாக்கம் திருவள்ளூர் ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை அருகில் பார் செயல்படுகிறது. இங்கு ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் சரக்கு கிடைக்கும். இதற்காக குவாட்டர் மது பாட்டிலுடன் 50 முதல் 70 ரூபாய் வரை எக்ஸ்ட்ரா கொடுக்க வேண்டும். அங்கு நியாயம் பேசினால் சரக்கு கிடைக்காது. மாறாக தலையில் பீர் பாட்டிலால் அடி தான் விழும். தாக்குதலுக்கு பயந்து குடிமகன்கள் கேட்கும் விலையை கொடுத்து சரக்கு வாங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அது நல்ல சரக்கா, டுபாக்கூர் சரக்கா என தெரியாமல் குடிமகன்கள் அதிகாலை முதலே கொள்ளை விலை கொடுத்து மது வாங்கி குடித்து மட்டையாகி ரோடுகளில் மல்லாக்கப்படுப்பது வழக்கம். கண்டு கொள்ளாமல் இருக்க போலீசாருக்கு நாள், வாரம், மாதம் என பல விதமாக மாமூல் சென்று விடுகிறது. இதனால் போலீசார் கண்டு கொள்வதில்லை. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோரை மடக்கி பிடிக்கும் போலீசார் ட்ரங்கன் ட்ரைவ் எனக்கூறி 10 ஆயிரம் ரூபாய் ஸ்பாட் ஃபைன் விதிக்கின்றனர். அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகிறது. அதிகப்படியான ஃபைன் வசூலிப்பதோடு வாகனத்தையும் பறிமுதல் செய்வதால் போலீசாருக்கும், குடிமகன்களுக்கும் இடையே கடும் தகராறு ஏற்படுவது சகஜமாகி விட்டது. இந்நிலையில் நேற்றிரவு ஆதம்பாக்கம் திருவள்ளூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே போலீசார் நின்று கொண்டு பாரில் இருந்து வெளியே வருவோருக்கு ட்ரங்கன் ட்ரைவ் என தலா 10 ஆயிரம் ரூபாய் ஃபைன் போட்டனர். இதைக்கண்டித்து குடிமகன்கள் நடுரோட்டில் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர். உரிமைத் தொகை 1000 ரூபாய் பெண்களுக்கு கொடுத்து விட்டு மது போதை எனக்கூறி ஆண்களிடம் பத்தாயிரம் ரூபாய் வசூலிப்பதா. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா. இது திராவிட மாடல் மோசடி ஆட்சி என குமுறினர். குடிமகன்களுக்கு ஆதரவாக சாலையில் செல்வோரும் போலீசாருக்கு எதிராக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குடிமகன்கள் மற்றும் பொதுமக்களின் சரமாரியான கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் போலீசார் காரில் ஏறி எஸ்கேப் ஆகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.