கோவை பி.எஸ்.ஜி. மெடிக்கல் காலேஜ் மைதானத்தில் துவங்கியது
கோவை பி.எஸ்.ஜி. மெடிக்கல் காலேஜ் மைதானத்தில் துவங்கியது / Sports competition / EB Staffs Participate / Covai தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்கள் பங்கேற்ற மண்டலங்களுக்கு இடையே ஆண்களுக்கான விளையாட்டு போட்டிகள், பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லுாரி மைதானத்தில் துவங்கியது. இப்போட்டிள் வரும் 5ம் தேதி நிறைவடைகிறது. இதில், கோவை, ஈரோடு, சென்னை, மதுரை, நெல்லை உட்பட எட்டு மண்டலங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். போட்டிகளை மின் தொடரமைப்பு கழக நிதிப்பிரிவு இயக்குனர் சுந்தரவதனம் துவக்கி வைத்தார். இதில் கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், செஸ், டேபிள் டென்னிஸ், கேரம், தடகளம், கூடைப்பந்து, கபடி உட்பட 14 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. கால்பந்து போட்டியில் திருநெல்வேலி அணியும், சென்னை அணியும் மோதியது. இதில் டை பிரேக்கர் முறையில் சென்னை அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கைப்பந்து போட்டியில் கோவை அணியும், திருச்சி அணியும் மோதியது. இதில், 2-1 என்ற செட்களில் கோவை அணி வெற்றி பெற்றது. பூப்பந்து போட்டியில் கோவை அணி 35-24, 35-30 என்ற புள்ளிகளில் நெல்லை அணியையும், சென்னை அணி 35-19, 35-32 என்ற புள்ளிகளில் வேலுார் அணியையும் வென்றது. 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், மதுரை அணியும், திருச்சி அணியும் மோதின. மதுரை அணி 20 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 141 ரன்கள் எடுத்தது. திருச்சி அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 118 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இரண்டாம் போட்டியில், வேலுார், கோவை அணிகள் மோதின. வேலுார் அணி, 20 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 114 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய கோவை அணி, 20 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 112 ரன்கள் எடுத்தது. வேலுார் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.