சிபிஐ விசாரணை துவங்கவுள்ள நிலையில் மானாமதுரை டிஎஸ்பி உட்பட 40 பேர் அதிரடி இடமாற்றம்
சிபிஐ விசாரணை துவங்கவுள்ள நிலையில் மானாமதுரை டிஎஸ்பி உட்பட 40 பேர் அதிரடி இடமாற்றம் / Ajith lockup death case / CBI enquiry start / 40 DSPs Transfer / Sivagangai சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் மடப்புரம் காளியம்மன் கோயிலின் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் அஜித்குமார், வயது 19. இவர் மீது மதுரை திருமங்கலம் பேராசிரியர் நிகிதா என்பவர் கொடுத்த நகைத்திருட்டு புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். சந்தேக வழக்கில் கைது செய்யப்பட்ட அஜித்குமார் போலீஸாரின் விசாரணையின் போது மரணமடைந்தார். அவர் தனிப்படை காவலர்களால் சரமாரியாக தாக்கப்படும் வீடியோ வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். 5 போலீஸார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பொய் வழக்கு புகழ் என பெயரெடுத்த மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சண்முகசுந்தரத்திற்குப் பதிலாக மானாமதுரை டிஎஸ்பியாக சிவகங்கை டிஎஸ்பி அமல அட்வின் நியமிக்கப்பட்டார். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணையை சிபிஐக்கு மாற்றிய ஐகோர்ட் மதுரை கிளை அடுத்த மாதம் 20-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து திருப்புவனம் போலீஸாரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பெற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணையைத் தொடங்க உள்ளனர். சிபிஐ விசாரணை தொடங்க உள்ள நிலையில், மானாமதுரைக்கு புதிய டிஎஸ்பி நியமிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரை டிஎஸ்பி அமல அட்வின் உட்பட தமிழகம் முழுவதும் 40 டிஎஸ்பிக்கள் பணி மாறுதல் செய்யப்பட்டு புதிய இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மானாதுரை டிஎஸ்பியாக காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.