மோடியே விளக்கிய பிறகும் முட்டாள்தனமான வாதம்: அண்ணாமலை Annamalai Counters Stalin on Parliament Issue
லோக்சபா தொகுதி வரையறையால் தமிழக எம்பிக்கள் எண்ணிக்கை குறையும் அபாயம் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக விவாதிக்க மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். முதல்வரின் இந்த பேச்சை தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிரான வாதங்களை தமிழக மக்கள் ஏற்காததால், திசை திருப்பும் முயற்சியாக எம்பி தொகுதி வரையறை விவகாரத்தை ஸ்டாலின் கையில் எடுத்துள்ளதாக கூறியுள்ளார். தன் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் போல், தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் மும்மொழி கல்வி கிடைப்பதை ஸ்டாலின் தடுக்க நினைத்தார். ஆனால் அவரது வாதத்தை பெயின்ட் டப்பாவை துாக்கித் திரியும் சிலரை தவிர, ஒட்டு மொத்த தமிழகமும் நிராகரித்துவிட்டது. இதனால் எம்பி தொகுதிகள் குறைந்துவிடும் என தன் கற்பனை மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் ஸ்டாலின். இதன் மூலம் திமுக தன் நிலைப்பாட்டில் அவமானகரமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. எம்பி தொகுதிகள் எல்லை நிர்ணயம் எப்போது நடக்கும், அது நடக்கும்போது, தென் மாநிலங்கள் உட்பட அனைவருக்கும் எப்படி சாதகமாக அமையும் என பிரதமர் மோடி ஏற்கனவே தெளிவாக விளக்கியுள்ளார். அப்படியிருந்தும் முதல்வர் ஸ்டாலின் ஏன் இந்த பயத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்?