பழனிசாமிக்கு இப்போ புரியும்: பாஜ பதிலடி | BJP | Narayanan Thirupathy
கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி 100 ரூபாய் நினைவு நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த விழாவில் மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் வெளியிட முதல்வர் ஸ்டாலின் நாணயத்தை பெற்றுக்கொண்டார். இது குறித்து தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவையில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக நாங்களும் நாணயம் வெளியிட்டோம். அப்போது பாஜவுடன் கூட்டணியில் இருந்தும் அவர்களை அழைக்கவில்லை. நாங்களே தான் வெளியிட்டோம். கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடுவதும், நாணயம் வெளியிடுவதும் அவர்களின் விருப்பம். அதை யார் வெளியிடுவது என்பதுதான் இங்கே கேள்வி. ஏன் ராகுலை அழைத்து வெளியிடவில்லை. ஆக திமுக, பாஜ ரகசிய உறவு வெட்ட வெளிச்சமாகியுள்ளது என பழனிசாமி கூறியிருந்தார். பழனிசாமியின் விமர்சனத்துக்கு பாஜ மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். எம்ஜிஆர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவின் போது தமிழகத்தின் அன்றைய பிரதான எதிர் கட்சியான திமுகவை அழைத்தது அதிமுக. கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவின் போது தமிழகத்தின் இன்றைய பிரதான எதிர் கட்சியான பாஜவை திமுக அழைத்துள்ளது. அவ்வளவு தான் விஷயம் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.