கருக்கலைப்பு மருந்து வாங்கி குவிக்கும் அமெரிக்க பெண்கள் | Donald Trump | US President Trump
அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக வென்றுள்ள டிரம்ப் அந்த நாட்டின் 47வது அதிபராகிறார். டிரம்ப் வெற்றியை தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் கருக்கலைப்பு, கருத்தடை மருந்துகளின் விற்பனை திடீரென அதிகரித்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக பெண்கள் அதிக அளவில் கருத்தடை, கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி இருப்பு வைத்து கொள்வது தெரியவந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான 60 மணி நேரத்தில் இந்த மாத்திரைகளின் விற்பனை 966 சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது கமலா ஹாரிசின் ஜனநாயக கட்சி சொன்ன குற்றச்சாட்டுக்களே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. ட்ரம்ப் அதிபரானால் நாடு தழுவிய கருக்கலைப்பு தடை அமலுக்கு வரும். பாலியல் வன்கொடுமைகள், நெருங்கிய குடும்ப உறவுகளுக்கு இடையேயான தகாத பாலுறவு மூலம் உருவாகும் கருவை கலைப்பது கூட ட்ரம்ப் ஆட்சி அமைந்தால் கடினமாகிவிடும். அதனால் ட்ரம்ப்பை ஆதரிக்கக்கூடாது என ஜனநாயக கட்சி பிரச்சாரம் செய்தது. முன்னதாக கருக்கலைப்பு என்பது நாடு தழுவிய பெடரல் உரிமை இல்லை என கடந்த 2022ல் அமெரிக்கா சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து உடனடியாக டிரம்பின் குடியரசு கட்சி ஆட்சியில் இருக்கும் மாகாணங்களில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளில் 3 பேர் டிரம்பால் நியமனம் செய்யப்பட்டவர்கள் என கமலா ஹாரிஸ் சுட்டிக்காட்டினார். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இப்போது ட்ரம்ப் அதிபராகும் நிலையில் பெண்கள் கருத்தடை சார்ந்த மருந்துகளை வாங்கி குவிக்கின்றனர்.