கேள்விக்குறியான மின் ஊழியர்களின் உயிர் பாதுகாப்பு | Seven EB staff | EB shock | Safety manpower |
தமிழகம் முழுதும் கடந்த 20 நாட்களில் 7 மின்வாரிய ஊழியர்கள் அடுத்தடுத்து பணியின்போது மின்சாரம் தாக்கி இறந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒயர்மேன்களான நீலகிரியை சேர்ந்த ஆனந்த், கள்ளக்குறிச்சி அத்தியப்பன், வாழப்பாடி செல்வராஜ், கடயநல்லூர் சமுத்திரம், கேங்மேன்களான திருப்பூரை சேர்ந்த நவீன், தினேஷ், ஜெயங்கொண்டம் செந்தில்குமார் ஆகியோரே இறந்தவர்கள். மின் இணைப்பு துண்டிப்பு புகார் தொடர்பாக குறிப்பிட்ட இடத்தில் அதனை சரி செய்யும் பணியில் இருந்தபோதே அவர்கள் இறந்துள்ளனர். இதன் மூலம் மின்துறை ஊழியர்கள் எந்த அளவு அபாயகரமான சூழலில் பணி செய்கிறார்கள், அவர்களுக்கான பாதுகாப்பு தரம் எந்த அளவு மோசமாக இருக்கிறது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆட்கள் பற்றாக்குறையே இதுபோன்ற மின் விபத்துகள் அதிகரிக்க காரணம் என்கின்றனர் மின்வாரிய ஊழியர்கள். மின் தடைகளை சரிசெய்வதில் வயர்மேன்களும், உதவியாளர்களுமே முக்கியப் பங்காற்றுகின்றனர். ஆனால் மாநிலம் முழுதும் அந்த பணியிடங்களில் காலி இடங்கள் அதிகமாக இருக்கிறது.