துணிக்கு சாயமிடுபவர் கேங்ஸ்டர் ஆக மாறிய இப்படித்தான் | Fake currency | Anaparthi | East Godavari
எஸ்பிஐ லோகோவுடன் கட்டுக்கட்டாக 1.60 கோடி போலி ரூபாய் நோட்டுகள்! போலீசிடம் சிக்கியது கள்ளநோட்டு கும்பல் ஆந்திராவின் அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் பாலந்தம் கிராமத்தை சேர்ந்த ஹரிபாபு, தமது காரை பழுது பார்க்க, கிழக்கு கோதாவரி மாவட்டம், பிக்கவோலுவை சேர்ந்த மெக்கானிக் ராம்பாபுவிடம் எடுத்து சென்றார். உதிரி பாகங்கள் வாங்க முன்பணமாக 2 ஆயிரம் ரூபாயை ஹரிபாபு தந்து இருக்கிறார். அந்த ரூபாய் நோட்டுகள் போலியானவை என்பதை உணர்ந்த மெக்கானிக் ராம்பாபு, போலீசுக்கு தகவல் கொடுத்தார். பணம் கொடுத்த ஹரிபாபுவிடம் போலீசார் விசாரித்தனர். காக்கிநாடா மாவட்டம் கஜுலூரை சேர்ந்த சீனிவாஸ், சீகட்லா எடுகொண்டலு ஆகியோருடன் ஹரிபாபு கூட்டு சேர்ந்து போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறு கடைகள் உள்ள வீதிகள், வார சந்தைகளில் இவர்கள் போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர். 1 லட்சம் ரூபாய் கொடுத்தால் 3 லட்சம் தருவதாக ஆஃபர் கொடுத்தும் சிலரிடம் போலி ரூபாய் நோட்டுகளை மாற்றி உள்ளனர். பழைய குண்டூர், பாலாஜி நகரை சேர்ந்த மணிக்குமார், மது ஆகியோர்தான், போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்து இவர்களுக்கு சப்ளை செய்தவர்கள். அவர்களையும் போலீசார் பிடித்தனர். இந்த கூட்டத்துக்கு தலைவனாக இருப்பவர் மணிக்குமார். புடவைகளுக்கு சாயமிடும் தொழில் தான் செய்து வந்தார். அந்த தொழிலில் தொடர் நஷ்டம் ஏற்பட்டதால், பணம் சம்பாதிக்க குறுக்கு வழியை தேர்வு செய்தார். இதற்காக இணையதளத்தில் வீடியோக்களை பார்த்து போலி ரூபாய் நோட்டு தயாரிக்க முடிவு செய்துள்ளார். நண்பன் மதுவின் துணையுடன், பிரிண்டர், லேமினேஷன் இயந்திரம் மற்றும் பிற உபகரணங்கள் வங்கி குடிசை தொழில் போல போலி ரூபாய் நோட்டு அச்சடித்துள்ளார். சந்தேகம் வராமல் இருக்க ரூபாய் நோட்டுகளை கட்டுவதற்கு எஸ்பிஐ வங்கி லோகோவுடன் கூடிய நாடாவை பயன்படுத்தி இருக்கிறார். கள்ளநோட்டு கும்பல் 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள, 500, 200, 100 ரூபாய் போலி நோட்டுகள், 9,680 ரூபாய் ரொக்கம், கார், 5 செல்போன்கள், போலி நோட்டு தயாரிக்க பயன்படுத்திய கருவிகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.