இஸ்ரேல் அட்டாக்கில் ஈரான் இழந்தது என்ன-பரபரப்பு தகவல் | Israel vs Iran | Israel attacks Iran | IDF
ஹமாசை தொடர்ந்து லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புலா பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவும் இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பெய்ரூட்டில் நடந்த தாக்குதலின் போது, ஹெஸ்புலா தலைவன் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி கொன்றது. இதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் மீது ஈரான் குண்டு மழை பொழிந்தது. ஒரே நேரத்தில் 200 பாலிஸ்டிக் ஏவுகணை குண்டுகளை இஸ்ரேல் மீது போட்டது. ஈரான் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் நேவாடியம் விமானப்படை தளம் சேதம் அடைந்தது. ஈரானுக்கு பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் அறிவித்து இருந்தது. அதன்படி 25 நாட்கள் கழித்து நள்ளிரவில் ஆட்டத்தை ஆரம்பித்தது இஸ்ரேல். இஸ்ரேலின் போர் விமானங்கள் ஈரானுக்குள் புகுந்தன. அதன் தலைநகர் டெஹ்ரான் உட்பட முக்கிய இடங்களில் செயல்படும் ராணுவ தளங்களை குறி வைத்து துல்லிய தாக்குதலை நடத்தின. நள்ளிரவில் ஒரு ரவுண்டும், அதிகாலையில் ஒரு ரவுண்டும் என 2 முறை ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை கண்டித்த ஈரான், இஸ்ரேலின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என்று அறிவித்தது. இன்னொரு பக்கம் இஸ்ரேலின் தாக்குதல் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 ரவுண்டுடன் முடிவுக்கு வந்தது. ஈரானுக்கு தர வேண்டிய பதிலடியை இஸ்ரேல் வெற்றிகரமாக கொடுத்து முடித்து விட்டதாக அதன் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி Daniel Hagari அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.