கரூர் புறப்பட்ட பாஜ எம்பிக்கள் கார் விபத்து | karur stampede | nda fact finding team's car accident
கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பல சந்தேகங்கள் கிளப்பப்பட்டு வருகிறது. இது பற்றி கரூர் போலீசார் ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் ஒரு நபர் விசாரணை கமிஷனும் தனித்தனியாக விசாரித்து வருகின்றன. சம்பவத்தில் சதி நடந்திருப்பதாக குற்றம் சாட்டும் தவெக, சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளது. இதற்கிடையே பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணி சார்பில் எம்பி ஹேமமாலினி தலைமையில் 8 எம்பிக்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவை பாஜ தலைவர் நட்டா அமைத்திருந்தார். இந்த டீம் இன்று காலை கோவை ஏர்போர்ட் வந்தடைந்தது. பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினரையும் சந்தித்து உண்மையை வெளிகொண்டு வருவோம் என்று அறிவித்தது. பின்னர் கோவையில் இருந்து நேரே கரூர் நோக்கி எம்பிக்கள் குழுவின் கார்கள் அடுத்தடுத்து புறப்பட்டன. சின்னியம்பாளையம் என்ற இடத்தில் சென்ற போது எதிர்பாராதவிதமாக எம்பிக்கள் கார் விபத்தில் சிக்கியது. கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதின. குறிப்பாக ஹேமமாலினி கார் மீது பின்னால் வந்த இன்னொரு எம்பியின் கார் மோதியது. இதில் ஹேமமாலினி கார் லேசான சேதம் அடைந்தது. பின்னால் வந்த காருக்கு சேதம் அதிகம் என்பதால், அதை தொடர்ந்து இயக்க முடியவில்லை.