கோவையின் தாவர அடையாளத்தை மீட்டெடுத்த தன்னார்வ அமைப்பு | Kovai naruvizhi plant | Attempt to recover |
கோவை நறுவிழி என்பது ஒரு செடி வகை தாவரம். இதன் தாவரவியல் பெயர் கார்டியா டிபியூசா. கோவை மஞ்சக் என்றும் அழைக்கப்படுகிறது. ஓரிட வாழ்வியான இது, உலகில் வேறு எங்கும் காண முடியாது என்பதால் கோவையின் தாவர அடையாளம் என்கின்றனர். இதன் வரலாறும் நீண்ட நெடியது. 1938ல் தாவரவியலாளர் கே.சி.ஜேக்கப், கோவை நறுவிழியை முதன்முதலில் அடையாளம் கண்டறிந்தார். அது கோவையில் மட்டும் பிரத்யேகமாக வளரும் தாவரம் என்பதையும் அறிவித்தார். இந்த செடி 3 மீட்டர் வரை வளரும். சொரசொரப்பான தன்மை கொண்டது. அதிக தண்ணீர் தேவையில்லை. மஞ்சள் நிற பழமும், வெளிறிய இளஞ்சிவப்பு பூக்களையும் கொண்டது. ஒரு விதையில் ஒன்றுக்கும் மேற்பட்ட செடிகள் முளைக்கும் தன்மை கொண்டது. 1978, 88ம் ஆண்டுகளில் அவ்வப்போது இச்செடி அடையாளம் காணப்பட்டாலும், 2018ல் நடத்திய ஆய்வில் 10க்கும் குறைவான செடிகளே காணக்கிடைத்தன. மக்களிடம் இச்செடி பற்றிய விழிப்புணர்வு இல்லாததே அழிவுக்கு காரணம். நகரமயமாதல், பாதைகள் விரிவாக்கத்தின்போது அழிந்துவிட்டன. அழிவின் விளிம்பில் இருந்த கோவை நறு விழியை மீண்டும் மீட்டெடுத்துள்ளது தன்னார்வ அமைப்பான கியூப். நாற்றாங்கால் அமைத்து, 3,500 கோவை நறுவிழி செடிகளை உருவாக்கி உள்ளனர். இச்செடியின் மருத்துவ குணங்கள், பண்புகள் குறித்து தெரிந்துகொள்ள பூங்கா அமைத்து ஆராய்ச்சி செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.