குன்றக்குடி கோயில் யானைக்கு பக்தர்கள் பிரியா விடை | Temple Elephant | Kundrakudi Elephant
சிவகங்கை, குன்றக்குடி சண்முகநாதர் கோயில் யானை சுப்புலட்சுமி. வயது 53. சுப்புலட்சுமி 1971ல் பக்தர் ஒருவரால் கோயிலுக்கு தானமாக கொடுக்கப்பட்டவள். சுப்புலட்சுமி ஓய்வெடுக்க கோயில் அருகிலேயே தகர கொட்டகை அமைக்கப்பட்டு இருந்தது. புதன் நள்ளிரவு மின்கசிவு காரணமாக கொட்டகையில் திடீரென தீ பிடித்தது. கொட்டகை மேல் இருந்த ஓலை பந்தலிலும் தீ பற்றி சுப்புலட்சுமி மீது விழுந்தன. சங்கிலியை உடைத்து கொட்டகையில் இருந்து சுப்புலட்சுமி வெளியேறியது. முகம், வயிறு மற்றும் வால் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டன. கோயில் மண்டபத்தின் முன் தீக்காயத்துடன் யானை நிற்பதை பார்த்த மக்கள் கோயில் நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். சிறப்பு மருத்துவ குழுவினர் சுப்புலட்சுமிக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். சோக நிகழ்வாக இன்று நள்ளிரவு 1.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமி இறந்தது. கோயில் யானை இறந்த செய்தி கேட்டு சுற்றுவட்டார மக்கள் திரண்டனர். ஊரே கண்ணீரில் மூழ்கியது. குன்றக்குடி பொன்னம்பல அடிகாளர், மதுரை ஆதீனம், அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்டோர் சுப்புலெட்சுமியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சுப்புலெட்சுமியின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பக்தர்கள் கனத்த இதயத்துடன் சுப்புலெட்சுமிக்கு பிரியா விடை கொடுத்தனர்.