கற்பனைக்கே எட்டாத மிசோரம் ரயில் திட்டம் bairabi-sairang railway line | mizoram train project | Modi
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் முற்றிலும் வித்தியாசமானது. மலைகள், பள்ளத்தாக்குகள் நிறைந்த இந்த மாநிலத்தில் கிட்டத்தட்ட 85 சதவீதம் காடுகள் தான். இங்கு ரயில் போக்குவரத்தை கொண்டு வருவது குதிரை கொம்பாக இருந்தது. அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து மிசோரமின் பைராபி வரை முதலில் ரயில் பாதை அமைக்கப்பட்டது. பைராபி மிசோரம் எல்லை பகுதியில் உள்ள ஊர். வெறும் 5 கிலோ மீட்டர் மட்டுமே மிசோரம் எல்லைக்குள் ரயில் பாதை கொண்டு வரப்பட்டது. இங்கு 2016ல் பிரதமர் மோடி ரயில் சேவையை துவங்கி வைத்தார். பைராபியில் இருந்து சாய்ராங் வரை ரயில் இயக்க வேண்டும் என்று 2008ம் ஆண்டிலேயே திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே மிசோரம் தலைநகர் ஐஸ்வாலுக்கு மிக எளிதாக போக்குவரத்தை கொண்டு வருவது தான். திட்டத்துக்கான அறிவிப்பு வெளியாகியும், பல காரணங்களால் உடனடியாக வேலை துவங்கவில்லை. அதன் பிறகு 2014ல் பதவி ஏற்ற மோடி, பைராபி-சாய்ராங் இடையே 51.38 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதை அமைக்க அடிக்கல் நாட்டினார். மிகவும் சவாலான இந்த வேலை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நடந்து வந்தது. இப்போது 98 சதவீத பணி முடிந்து விட்டது. ரயில் சோதனை ஓட்டமும் வெற்றி அடைந்தது.