மாநாட்டில் உதவியாளரை மரியாதை குறைவாக பேசிய அமைச்சர்
தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி 2 நாட்கள் நடைபெறுகிறது. இக்கண்காட்சியை தமிழக வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். வணக்கம் கூறி, மைக்கில் பேசத்தொடங்கினார். அவர் பேசுவதற்கான குறிப்புகள் அடங்கிய பேப்பர் அங்கு இல்லை. அதை தேடிய அமைச்சர், எங்கே அவன்; பரசுராமன் எங்கே... என்று தனது உதவியாளரை கூப்பிட்டார். பேச்சு குறிப்பு அடங்கிய பேப்பரை தருவதற்காக உதவியாளர் ஓடி வந்தார். அப்போது அமைச்சர், எருமை மாடாடா நீ; பேப்பர் எங்கே என உதவியாளரை திட்டினார். அந்த பேப்பரை உதவியாளர் கொடுத்துவிட்டு சென்றார். அனைவர் முன்னிலையில் உதவியாளரை அமைச்சர் திட்டியது மைக்கில் எதிரொலித்தது.