மொத்த மரணத்துக்கும் காரணம் இந்த தப்பு தான் | wayanad landslide | kerala govt | Mundakkai landslide
மொத்த மரணத்துக்கும் காரணம் இந்த தப்பு தான் | wayanad landslide | kerala govt | Mundakkai landslide கேரளாவின் வயநாட்டில் நடந்த நிலச்சரிவு இந்தியாவை உலுக்கிய நிலையில், அரசியல் களத்திலும் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் பேரிடர் முன் அறிவிப்பு சிஸ்டம் இது பற்றி எச்சரிக்கைவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. பார்லிமென்ட்டில் இதற்கு பதில் அளித்த அமித்ஷா, 7 நாள் முன்பே கேரள அரசை மத்திய அரசு எச்சரித்தது. வயநாடு பகுதியில் 24 மணி நேரத்தில் 200 மிமீ தாண்டி கனமழை கொட்டித்தீர்க்கும். நிலச்சரிவு அபாயமும் உள்ளது என்று சொன்னோம். ஆனால் கேரளா என்ன செய்தது? எச்சரிக்கையாக மக்களை வெளியேற்றி இருந்தால் இவ்வளவு மரணம் நேர்ந்து இருக்காது என்று அமித்ஷா சொன்னார். ஆனால் அமித்ஷா சொன்னதை கேரள முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாக மறுத்தார். நிலச்சரிவுக்கு முன்பு வயநாட்டுக்கு ஆரஞ்சு அலர்ட் தான் விடுக்கப்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட பிறகு தான் வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்தது. முன்கூட்டியே எந்த எச்சரிக்கையும் வரவில்லை. இது அரசியல் பேசுவதற்கான நேரம் இல்லை. அமித்ஷாவை கருத்தை நான் விரோதமாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பினராயி சொன்னார். இந்த நிலையில் தான் பல அமைப்புகள் வயநாடு மாவட்டத்துக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த தகவல் வெளியாகி பூகம்பத்தை உண்டு பண்ணி இருக்கிறது. குறிப்பாக சிபிஆர்எம்எஸ் என்னும் மழை கண்காணிப்பு அமைப்பு வயநாடு மாவட்ட நிர்வாகத்தின் அவசர கால பிரிவுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்துள்ளது. நிலச்சரிவு செவ்வாய் அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஏற்பட்டது. ஆனால் திங்கள் காலையிலேயே அந்த அமைப்பு இதுபற்றி அவசர கால பிரிவுக்கு தகவல் அனுப்பியது. வயநாட்டில் நிலச்சரிவு அபாயம் இருக்கும் பகுதிகளில் 24 மணி நேரத்தில் 200 மில்லி மீட்டருக்கு மேல் கனமழை கொட்டித்தீர்க்க வாய்ப்பு உள்ளது. இதனால் நிலச்சரிவும் ஏற்படக்கூடும் என்று அலர்ட் விடுத்தது. எச்சரிக்கை வந்த பிறகும் வயநாடு மாவட்ட நிர்வாகம் உடனே சுதாரிக்கவில்லை. காலையில் வந்த அறிவிப்பு பற்றி இரவு 10:35 மணிக்கு தான் அலர்ட் விடுத்தது. அதுவும், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மட்டுமே சொன்னது. நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களில் இருந்து மக்கள் உடனே வெளியேற வேண்டும் என்று கூறவில்லை. இதே போல வானிலையை முன்கூட்டியே கணிப்பதில் நிபுணத்துவம் பெற்ற தன்னார்வ அமைப்பான சூற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு உயிரியல் மையமும் இதுபற்றி 2 நாள் முன்பே துல்லியமாக எச்சரித்தது. புதுமலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம், சூரல்மலை, தேத்தமலை, காப்பிக்களம், தொண்டை நாடு பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று 48 மணி நேரம் முன்பே கணித்து சொன்னது. இந்த இடங்களில் இருந்து மக்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டு இருக்க வேண்டும் என்றும் இந்த அமைப்பு இப்போது ஆதங்கப்படுகிறது. அதே போல் ஹியூம் சென்னடர் என்ற அமைப்பின் இயக்குனர் விஷ்ணுதாசும் வயநாடு மாவட்ட நிர்வாகத்தை விளாசினார். முண்டக்கை பகுதி மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட வேண்டியதை திங்கட்கிழமை காலையிலேயே சொன்னோம். இது பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் அனுப்பினோம். அவர்களுக்கு நாங்கள் என்னவெல்லாம் அனுப்பினோம் என்பதற்கான ஆதாரம் உள்ளது என்றார் விஷ்ணு தாஸ். களத்தில் மக்களை எச்சரித்த ஒரே நபர் மேப்பாடி பஞ்சாயத்து தலைவர் பாபு மட்டும் தான். அவரை தவிர வேறு எந்த எச்சரிக்கையும் மக்களுக்கு போகவில்லை. திங்கட்கிழமை வானிலை மோசம் அடைவதை பார்த்தோம். மக்களை உடனடியாக வெளியேற அறிவுறுத்தினோம். சுற்றுலாப்பயணிகள் சாரை சாரையாக ரிசார்ட்டுகளுக்கு வந்து கொண்டு இருந்தனர். அவர்களை வெளியேற்றி விட்டு ரிசார்ட்களை மூட வேண்டும் என்று அறிவுறுத்தினோம். சரியான ஒத்துழைப்பு கிடைத்து இருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்க முடியும் என்று வேதனை தெரிவித்தார் பாபு. மொத்தத்தில் பல வழிகளில் கனமழை, நிலச்சரிவு பற்றிய அபாய சிக்னல் வயநாடு மாவட்ட நிர்வாகத்துக்கு முன்கூட்டியே கிடைத்து இருக்கிறது. இதை சீரியசாக மாவட்ட நிர்வாகம் எடுத்து இருந்தால், முண்டக்கை, சூரல்மலை நிலச்சரிவில் வீடுகள் மட்டுமே சிக்கி இருக்கும். மக்கள் பத்திரமாக உயிர் தப்பி இருப்பார்கள்.