கவரைப்பேட்டை ரயில் விபத்தில் கவனிக்க வேண்டியவை | Kavaraipettai | Darbhanga Express | Train Accident
கவரைப்பேட்டை ரயில் விபத்தில் கவனிக்க வேண்டியவை | Kavaraipettai | Darbhanga Express | Train Accident கவரைப்பேட்டை ரயில் விபத்தில், உயிர் இழப்பு எதுவும் ஏற்படாததற்கு ஐந்து முக்கிய காரணங்கள் இருந்துள்ளது. முதலாவதாக ஒடிசாவில் நடந்த கோரமண்டல் ரயில் விபத்துக்குப் பின் வளைவுகள் அதிகமாக உள்ள பகுதிகளில் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் மணிக்கு 130ல் இருந்து 100 கிமீ ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரயில் மணிக்கு 100 கிமீ வேகத்துக்குள் தான் இயக்கப்பட்டுள்ளது. 2வதாக ரயில் மெயின் லைனில் செல்லாமல், லுாப் லைனில் செல்லும்போது ஓட்டுனர் உஷராகி அவசர கால பிரேக் பயன்படுத்தியதால் வேகம் 75 கிமீ ஆக குறைந்து கொண்டே சென்று மோதியுள்ளது. அதனாலும் பாதிப்பு குறைந்துள்ளது. மூன்றாவதாக சம்பவம் நடந்த உடனே அருகில் இருந்த மற்றொரு ரயில் பாதையில் எந்த ரயிலும் செல்ல அனுமதிக்கவில்லை. அந்த பாதையில் வர வேண்டிய ரயில்களும் நிறுத்தப்பட்டன. 4வதாக லுாப் லைனில் 200 மீட்டர் துாரத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் பெட்டிகள் காலியாக இருந்துள்ளன. மேலும் அந்த ரயிலின் கடைசியில் இருந்த பிரேக் வேகனில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதாலும் சேதம் குறைந்துள்ளது. கடைசியாக எக்ஸ்பிரஸ் ரயிலில், எல்.எச்.பி. வகை நவீன பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. ரயில் தடம் புரண்டாலும், ஒன்றுடன் ஒன்று மோதினாலும், தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டு பயணியரை காக்கும் புதிய தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கப்ளிங் கொண்டவை. விபத்து நடந்தால் பெட்டிகள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக மேல் ஏறி நிற்காது. விபத்தில் உயிரிழப்பு ஏற்படாததற்கு இந்த 5ந்தும் முக்கிய காரணங்கள் என ரயில்வே துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.