நீர் மேலாண்மையை மறந்த நீர்வளத்துறை! Water Management | Water Resources | Monsoon Rain
தமிழகம் முழுதும் நீர்வளத்துறை பராமரிப்பில் 14,140 ஏரிகள் உள்ளன. இதில் அதிகபட்சமாக, கன்னியாகுமரியில் 2,040, சிவகங்கையில் 1,459, மதுரையில் 1,340, புதுக்கோட்டையில் 1,132 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளுக்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் நீர்வரத்து கிடைக்கிறது. தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் உள்ளிட்ட வடமாவட்டங்கள், திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில், கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இருப்பினும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏரிகளுக்கு போதிய நீர்வரத்து கிடைக்கவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, 780 ஏரிகளில், 281 மட்டுமே நிரம்பியுள்ளன. கனமழை கொட்டியும் 61 ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. மீதமுள்ள ஏரிகள் அரைகுறையாக நிரம்பியுள்ளன. தென்காசி மாவட்டத்தில் உள்ள, 543 ஏரிகளில் 296 மட்டுமே நிரம்பியுள்ளன. அத்துடன் 37 ஏரிகளில், 25 சதவீதத்துக்கு குறைவாகவும், 38 ஏரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவுமே நீர் உள்ளது. சேலம் மாவட்டத்தில் கனமழை பெய்த நிலையில், அங்குள்ள 107 ஏரிகளில் 51 மட்டுமே நிரம்பியுள்ளன. ஆனால் ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல், 25 ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. போதிய நீர்வரத்து கிடைக்காததால், தர்மபுரியில் 31 ஏரிகளும், கன்னியாகுமரியில் 11 ஏரிகளும், நாமக்கல்லில் 38 ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன. சமீபத்தில் பெண்ணையாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், இரவு நேரத்தில் சாத்தனுார் அணை திறக்கப்பட்டது. அதிகப்படியாக திறந்த நீரால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. இது நீர்வளத்துறை மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, ஆறுகளில் வந்த நீரை, ஏரிகளுக்கு மாற்றும் முயற்சியில், நீர்வளத்துறையினர் கவனம் செலுத்தவில்லை. நீர் மேலாண்மையை முறையாக கடைப்பிடிக்காததால், மழைநீர் கடலுக்கு அனுப்பப்பட்டு, வீணடிக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.