கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவியது ஏன்? russia ukrain war| RS-26 Rubezh missile| ICBM |USA
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி இரண்டரை ஆண்டுகளுக்குமேல் ஆகிறது. இன்னும் போர் முடியவில்லை. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவிகள் வழங்கி வருகின்றன. நீண்ட தூரம் சென்று இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி இருந்தது. எனினும், அவற்றை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. வடகொரியா ராணுவ வீரர்களை சேர்த்துக்கொண்டு உக்ரைனை தாக்க ரஷ்யா ஆயத்தமாகி வருவதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என அமெரிக்காவை ஜெலன்ஸ்கி கேட்டு இருந்தார். அதிபர் பைடனும் ஓகே சொல்லிவிட்டார். 2 தினங்களுக்கு முன், அமெரிக்காவின் ஏவுகணைகளை ரஷ்யா மீது உக்ரைன் ஏவி தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவின் பிரியான்ஸ்க் நகரில் உள்ள ஆயுத கிடங்கை ஏவுகணை தாக்கியது. அமெரிக்காவின் ஏவுகணையை பயன்படுத்தும் பட்சத்தில், உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்து இருந்தார். இச்சூழலில்தான், உக்ரைனுக்கு பதிலடி தரும் வகையில், கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணையை உக்ரைன் மீது ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தி இருக்கிறது. உக்ரைனின் டினிப்ரோ Dnipro நகரில் உள்ள நிறுவனங்கள் முக்கியமான உள்கட்டமைப்புகளை குறிவைத்து RS-26 Rubezh ஏவுகணை ரஷ்யா ஏவியது. இதில் 2 பேர் காயமடைந்தனர். 12 மீட்டர் நீளம், 36 டன் எடை கொண்ட RS-26 வகை ஏவுகணை 5800 கிலோ மீட்டர் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. அணு ஆயுதங்களையும் தாங்கி சென்று தாக்கும் வல்லமை பெற்றது. ஆனால், இந்த தாக்குதலில் ஆணு ஆயுதங்கள் ஏதும் இல்லை.