புதையல் தேடி இடிக்கப்பட்ட கோயில்: வேலூரில் அதிர்ச்சி | Sivanathapuram | Temple
ஆயிரம் காலத்து கோயில் இது! இப்படி அநியாயமா இடிச்சுட்ட.. 1 கல்ல தூக்க முடியுமா உன்னால..? வேலூரில் சிவநாதபுரம் மலை மீது பழமை வாய்ந்த கைலாசநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில் சிதிலமடைந்து இடிந்த நிலையில் காணப்படுகிறது. மலை உச்சியில் 5 ஆயிரம் அடி உயரத்தில் கோயில் அமைந்துள்ளதால் ஒரு சில மக்கள் மட்டுமே தரிசனம் செய்ய வருகின்றனர். பராமரிப்பு இல்லாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி இருக்கிறது. மன்னர்கள் காலத்தில் சிவநாதபுரம் மலை மீது கோட்டை இருந்ததாகவும், மலையை சுற்றி புதையல் இருப்பதாகவும் வதந்தி பரவி இருக்கிறது. இதனை அறிந்த கும்பல் ஒன்று கடந்த மூன்று நாட்களாக மலை மீது கூடாரம் அமைத்து புதையல் தேடியுள்ளது. உள்ளூர் இளைஞர்கள் அங்கு சென்று பார்த்த போது 10க்கும் மேற்பட்ட ஆசாமிகள் கையும் களவுமாக சிக்கியுள்ளனர். பழமையான கைலாசநாதர் கோயில் தூண்களை இடித்தும், கோயில் சுற்றுசுவர் கற்களை பெயர்த்து எடுத்தும் புதையல் தேடியுள்ளனர். இடித்த ஒரு கல்லை தூக்கி அதே இடத்தில் வை பார்க்கலாம்; உன்னை விட்டுறேன் என உள்ளூர் இளைஞர்கள் ஆவேசமாக கேட்டதுக்கு கோயிலை இடித்த ஆசாமிகள் பதில் சொல்ல முடியாமல் திணறி நின்றனர். இதே போல இன்னும் பல கும்பல் வேலூர் மாவட்டத்தில் முகாமிட்டு புதையல் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. காவல்துறையும், வனத்துறையும் இவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவநாதபுரம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சும்மா ஆடு மேய்க்க சென்றாலே மிரட்டும் வனத்துறை அதிகாரிகள், ஒரு 3 நாட்களாக கூடாரம் அமைத்து புதையலை தேடியதை எப்படி கண்டுகொள்ளாமல் விட்டனர் என கேள்வி எழுப்பி உள்ளனர்.