மீண்டும் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ், புட்ஸ் வில்மோர் | Sunita Williams | Butch Wilmore
நாசா விஞ்ஞானிகள் சுனிதா வில்லியம்சும், புட்ஸ் வில்மோரும் ஆய்வு பணிக்காக கடந்த ஆண்டு ஜூன் 5ல் சர்வதேச விண்வெளி மையம் புறப்பட்டனர். போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் ராக்கெட்டில் 10 நாள் பயணமாக சென்றனர். ஆனால், திட்டமிட்டபடி அவர்களால் மீண்டும் பூமிக்கு திரும்ப முடியவில்லை. அவர்கள் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பழுதுதான் அதற்கு காரணம். ராக்கெட் பூமியில் பத்திரமாக தரையிறங்க உதவும் த்ரஸ்டரில்தான் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க தொடர் முயற்சிகள் எடுத்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. கடைசியில் ஸ்டார்லைனரில் விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வருவது மிகவும் ஆபத்தானது என்று விண்வெளி நிறுவனம் அறிவித்தது. சுனிதா, வில்மோர் இல்லாமலேயே கடந்த செப்டம்பரில் ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்குத் திரும்பியது. இதையடுத்து இருவரையும் எலான் மஸ்க்கின் ஸ்பேறஸ எக்ஸ் உதவியுடன் பூமிக்கு அழைத்து வர நாசா முடிவு செய்தது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, நான் அதிபரானால் சுனிதா வில்லியம்ஸ்சை மீட்டு பத்திரமாக பூமிக்கு கொண்டுவருவேன் என டிரம்ப் கூறியிருந்தார்.