20 ஊர்களில் ஊற்றும் கனமழை-முக்கிய அப்டேட் | tn heavy rain today chennai imd | imd heavy rain alert
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் அறிக்கை: தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்துக்கு இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும். இன்று திருநெல்வேலி மாவட்ட மலை பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும். நாளை பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். கனமழைக்கு வாய்ப்பில்லை. அதே நேரம் நாளை மறுநாள் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். 17ம் தேதியை பொறுத்தவரை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 18ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் கூறி உள்ளது. இன்று காலையுடன் முடிந்த கடைசி 24 மணி நேர நிலவரப்படி, அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் 70 மிமீ, நீலகிரியின் அழகரை எஸ்டேட், ராமநாதபுரத்தின் பாம்பனில் 50 மிமீ, நீலகிரியின் கீழ்கோத்தகிரி எஸ்டேட், திருநெல்வேலியின் ஊத்து, திருவண்ணாமலையின் செங்கம் பகுதிகளில் 30 மிமீ மழை பதிவாகி உள்ளது.