ஐகோர்ட் நீதிபதி கண்டனம் திருமாவளவனுக்கு சிக்கல் Vck men attacked lawyer madras high court justice sa
சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி கவாய் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை ஐகோர்ட் அருகே கடந்த 7ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம் முடிந்ததும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காரில் புறப்பட்டார் . அப்பொழுது அவரது கார் முன்னால் சென்ற ஸ்கூட்டர் மீது லேசாக மோதியது. அந்த ஸ்கூட்டரை ஓட்டியது ஒரு வழக்கறிஞர். அவர் பெயர் ராஜீவ் காந்தி. அவர் காரில் இருந்தவர்களுடன் வாக்குவாதம் செய்தார். உடனே காரில் இருந்த விடுதலைச் சிறுத்தை கட்சியினர் இறங்கி வந்து வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை தாக்கினர். அவரது ஸ்கூட்டரையும் சாலையில் தள்ளி விட்டு சேதப்படுத்தினர். சென்னை ஐகோர்ட் நுழைவாயில் முன் இந்த சம்பவம் நடந்தது. தன்னை தாக்கியவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக வழக்கறிஞர் ராஜிவ் காந்தி தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்துக்குள் ஓடினார். அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர்கள் விரட்டிச் சென்று சரமாரியாக தாக்கினர், பார் கவுன்சிலில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தினர். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் போலீசாரின் மெத்தனமான செயல்பாடுக்கு வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. திருமாவளவன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர்கள் சென்னை ஐகோர்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். பேரணியாகச் சென்று தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்தில் புகார் மனுவும் அளித்தனர். இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட கோரி பார் கவுன்சில் இணைத்தலைவர் வழக்கறிஞர் கே. பாலு, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை நீதிபதி சதீஷ்குமார் விசாரித்தார் இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததை தவிர போலீசார் வேறு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இரு தரப்பினர் மீதும் எந்த அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என நீதிபதி சதீஷ்குமார் போலீஸ் தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டார் இந்தச் சம்பவத்தை பார்த்துக் கொண்டு இருந்த அரசியல் கட்சித் தலைவர் சம்பவத்தை கட்டுப்படுத்தாமல் பிரச்னையை தூண்டும் விதத்தில் செயல்பட்டாரா? ஒரு வழக்கறிஞரை கட்சியினர் தாக்கிய போது போலீசார் என்ன செய்து கொண்டு இருந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரிக்க வேண்டும் என்ற நீதிபதி சதீஷ்குமார், விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் போலீசுக்கு உத்தரவிட்டார். வழக்கு விசாரணை 2 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.