ஆந்திர மதுபான ஊழல் வழக்கு: ஜெகன் மோகன் & கோவுக்கு சிக்கல் Viral Video Andhra Liquor Scam Rs 35 Cro
டில்லியில் கெஜ்ரிவால் 2021 ல் புதிய மதுபான கொள்கையை கொண்டு வந்து ஊழலில் சிக்கினார். அதற்கு முன்பே, 2019ல் ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் ஜெகன்மோகன் ரெட்டி புதிய மதுபானக்கொள்கையை அறிமுகப்படுத்தினார். தனியார் மதுபானக்கடைகளுக்கு பதிலாக மதுபானங்களை விற்க அரசே மதுக்கடைகளை துவங்கியது. தனியாருக்கு சாதகமாக மதுபான கொள்கையை உருவாக்கி, மிகப்பெரிய அளவுக்கு ஊழல் செய்ததாக, தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் பாஜ ஆகியவை ஜெகன்மோகன் ரெட்டி மீது குற்றம்சாட்டின. 2024 தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று, சந்திரபாபு நாயுடு முதல்வரானதும் ஜெகன் மோகன் ஆட்சியில் நடந்த மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கடந்த சில மாதங்களாக தீவிரமாக விசாரித்த எஸ்ஐடி அதிகாரிகள், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகளை அதிரடியாக கைது செய்தனர். ராஜம்பேட்டை எம்.பி. மிதுன் ரெட்டி, சந்திரகிரி முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் ரெட்டி, ஜெகன் மோகன் ரெட்டியின் ஆலோசகராக இருந்த ராஜ் காசிரெட்டி, ஜெகன் மோகன் செயலாளர் தனஞ்செய ரெட்டி, சிறப்பு அதிகாரி கிருஷ்ண மோகன் ரெட்டி, பாரதி சிமென்ட்ஸ் இயக்குனர் பாலாஜி கோவிந்தப்பா உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மதுபான ஊழல் வழக்கில் முக்கிய திருப்பு முனையாக ஐதராபாத்தில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து ₹ 11 கோடி பணத்தை எஸ்ஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர். முக்கிய குற்றவாளியான ராஜ் காசிரெட்டியின் உத்தரவின் பேரில் வருண் மற்றும் சாணக்யா ஆகியோர் 12 பெட்டிகளில் ₹ 11 கோடியை மறைத்து வைத்ததாக ஒப்புக்கொண்டனர். இதனால் ராஜ் காசிரெட்டி வசமாக சிக்கியுள்ளார். முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் ரெட்டியின் உதவியாளர் வெங்கடேஷ் நாயுடு கட்டு கட்டாக பணத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வீடியோவை எஸ்ஐடி SIT அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். வெங்கடேஷ் நாயுடுவின் செல்போனை பறிமுதல் செய்து ஆராய்ந்தபோது அதில் இந்த வீடியோ இருந்துள்ளது என அதிகாரிகள் கூறினர். மதுபான கொள்கை ஊழல் மூலம் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் ரெட்டிக்கு கிடைத்த பணத்தை ஒரு இடத்தில் பெற்று, இன்னொரு இடத்தில் பதுக்கி வைப்பதில் அவரது உதவியாளர் வெங்கடேஷ் நாயுடு முக்கிய பங்கு வகித்ததாக எஸ்ஐடி அதிகாரிகள் கூறினர். இந்த வீடியோவில் இருக்கும் பணம் கிட்டத்தட்ட 35 கோடி என கூறப்படுகிறது. பணம் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது எனபாஸ்கர் ரெட்டி, வெங்கடேஷ் நாயுடுவிடம் எஸ்ஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஐதராபாத் பண்ணைவீட்டில் 11 கோடி ரூபாய் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 35 கோடி ரூபாயை வெங்கடேஷ் நாயுடு அடுக்கி வைத்து பத்திரமாக பார்த்துக்கொள்ளும் வீடியோ ஆந்திர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த 2 வீடியோக்களும் ஆந்திராவில் வைரலாக பரவி, ஜெகன் மோகன் ரெட்டிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில் வரும் நாட்களில் இன்னும் சில ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் சிக்க வாய்ப்புள்ளது என எஸ்ஐடி வட்டாரங்கள் கூறின. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதால், ஜெகன்மோகன் ரெட்டி அன்ட் கோ கலக்கத்தில் உள்ளது.