வீட்டு சிறையில் தன்கர்? அமித்ஷா பரபர பேட்டி amit shah on jagdeep dhankhar resignation | house arrest
ஹவுஸ் அரஸ்ட்டில் ஜகதீப் தன்கர்? உண்மையை உடைத்த அமித்ஷா! ராஜினாமாவில் சதி? காங்கிரசுக்கு ‛கிழி துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கர், அவரது பதவிக்காலம் முடியும் முன்பே ராஜினாமா செய்தார். கடந்த மாதம் 21ம் தேதி வழக்கம் போல் ராஜ்யசபா கூட்டத்தை நடத்தி முடித்த தன்கர் திடீரென ஜனாதிபதியை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். உடல் நலனை காரணம் காட்டி, அரசியல் அமைப்பு பிரிவு 67-ஏ அடிப்படையில் பதவியை ராஜினாமா செய்வதாக சொல்லி இருந்தார். ஜனாதிபதி, மோடி, அமைச்சரவைக்கும், அனைத்து எம்பிக்களுக்கும் தன்கர் நன்றி தெரிவித்தார். இந்த விஷயம் எம்பிக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தன்கர் ராஜினாமா அரசியல் களத்தில் புயலை கிளப்பியது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதில் சதி இருப்பதாக சந்தேகம் கிளப்பின. பாஜ தான் அவரை வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்திருக்கிறது என்று குற்றம் சாட்டின. ராஜினாமாவுக்கு பிறகு தன்கர் ஏன் வெளியே வரவில்லை. அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று கூட தெரியவில்லையே என தொடர்ந்து சந்தேகம் கிளப்பி வருகின்றன. இது பற்றி பேட்டி ஒன்றில் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஆங்கர் கேள்வி எழுப்பினார். ‛தன்கர் ராஜினாமாவில் சதி இருக்கிறது என்கின்றனர். அவர் இப்போது ஹவுஸ் அரஸ்ட்டில் இருப்பதாக சந்தேகம் கிளப்புகின்றனர். உண்மையில் என்ன நடந்தது என்று கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த அமித்ஷா எதிர்கட்சிகளை சாடினார். அவர் கூறியது: இந்த விவகாரத்தில் தேவையின்றி குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். ஜகதீப் தன்கர் அரசியல் சாசன பதவி ஒன்றை வகித்தார். தன்னுடைய பதவி காலத்தில், அரசியல் சாசனப்படி சிறப்பான முறையில் பணியாற்றினார். உடல் நிலை காரணமாக அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த விஷயத்தில் வேறு எதுவும் இருக்குமோ என்று தேவையின்றி தீவிர ஆராய்ச்சி செய்வது தான் குழப்பத்துக்கு காரணம். தன்கரின் ராஜினாமா கடிதமே தெளிவான விளக்கம் அளித்து இருக்கிறது. உடல் நிலை தான் காரணம் என்று சொல்லி விட்டார். பிரதமர், அமைச்சர்கள், அனைத்து எம்பிக்களுக்கும் தனது மனதில் இருந்து நன்றியும் கூறி இருக்கிறார். இந்த விவகாரத்தை தேவையின்றி பெரிதுபடுத்துகிறார்கள் என்று அமித்ஷா கூறி உள்ளார்.