அறியாமை எனும் பேரின்ப உலகத்தில் வாழும் ஸ்டாலின் Annamalai | BJP President | CM Stalin |
ஓட்டு வங்கிக்கு ஆபத்து வருகிறது என உணரும் போது மும்மொழி கொள்கை என சொல்லி பிரிவினையை உருவாக்க சில தலைவர்கள் முயல்கின்றனர் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். இதற்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: இருமொழி கொள்கை மற்றும் நியாயமான தொகுதி மறு சீரமைப்பு குறித்து தமிழகத்தில் எழுந்த குரல் தேசிய அளவிலும் எதிரொலிப்பதால் பாரதிய ஜனதா அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அந்தக் கட்சித் தலைவர்களின் பேட்டியை பார்த்தாலே அது தெரிகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க விரும்புகிறார். எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல; வாக்கு வங்கி அரசியலுக்காகவும் பேசவில்லை. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம். மொழி அடிப்படையில் மக்களிடம் பிளவை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் கிடையாது. மொழி திணிப்பையும், அதன் ஆதிக்கத்தையும் மட்டுமே எதிர்க்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். முதல்வர் ஸ்டாலின் கருத்து தொடர்பாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஸ்டாலின், அரசியல் அமைப்பு மற்றும் கூட்டாட்சி முறையின் பாதுகாவலர் என பொய் பேசி மற்றவர்களை ஏமாற்றும் ஒரு ஏமாற்றுக்காரர். பொதுவாக இது போன்ற ஏமாற்றுக்காரர்கள் பணக்காரர்களைத்தான் ஏமாற்றுவர். ஆனால், திமுகவினர் எந்த வித்தியாசமும் காட்டுவதில்லை. அவர்கள் பணக்காரர்களையும் ஏமாற்றுகின்றனர், ஏழைகளையும் ஏமாற்றுகின்றனர். முதல்வரின் குடும்பத்தினர் 3 அல்லது அதற்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்றுத் தரும் தனியார் பள்ளிகளை நடத்துவதும், அவர்களுடைய கல்வி கொள்கையை அரசு பள்ளி மாணவர்கள் விஷயத்தில் எதிர்ப்பதும் நாட்டு மக்கள் அனைவரும் அறிந்து வைத்துள்ளனர். மக்கள் உங்களை நயவஞ்சகர் என அழைக்கிறார்கள். திமுகவினர் மும்மொழி கொள்கைக்கு எதிராக சில இடங்களில் நடத்திய நாடகம், ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரதிபலிப்பு என முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கொண்டு இருக்கிறார். முக்கியமில்லாத விஷயங்களில் மக்களின் கவனத்தை திசை திருப்ப நீங்கள் எடுத்த முயற்சிகள் அம்பலமாகிவிட்டன. அதை நீங்கள் உணரவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம். நீங்கள் அறியாமை என்கிற பேரின்ப உலகத்திலேயே வாழுங்கள். நாங்கள் தொந்தரவு செய்ய மாட்டோம் என அண்ணாமலை கூறி உள்ளார்.