மஸ்தான் நீக்கப்பட்ட பின்னணியில் அதிர்ச்சி தகவல்கள் | K S Masthan | DMK Minister
தமிழக அமைச்சரவை மாற்றத்தின் போது மஸ்தான் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் பின்னணியில் பல காரணங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மரக்காணம், செய்யூர் போன்ற இடங்களில் நடந்த கள்ளச்சாராய மரணத்துக்கு பின் மஸ்தானுக்கு நெருக்கடி துவங்கியது. கள்ளச்சாராய வியாபாரிக்கு மஸ்தான் கேக் ஊட்டி விடும் போட்டோவை தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருந்தார். கள்ளச்சாராய வியாபாரியுடன் மஸ்தான் குடும்பத்துக்கு இருந்த நெருக்கம் திமுக தலைமைக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. கட்சியிலும், அரசு நிர்வாகத்திலும் மஸ்தான் குடும்பத்தினர் தலையீடு இருந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் விழுப்புரம் வடக்கு மாவட்டம் முழுக்க பல பதவிகள் மஸ்தான் குடும்பத்தினருக்கே வழங்கப்பட்டுள்ளது. செஞ்சி மஸ்தானின் சகோதரர் நசீர் செஞ்சி நகர திமுக செயலாளர் பதவியிலும், விழுப்புரம் வடக்கு மாவட்ட ஐடி அணி ஒருங்கிணைப்பாளராக செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் அலி இருந்து வந்தனர். அதேபோல விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராகச் செஞ்சி மஸ்தானின் மருமகன் ரிஸ்வான் இருந்து வந்தார். திண்டிவனம் நகர்மன்ற தலைவராக நிர்மலா இருந்தாலும் முழு அதிகாரமும் ரிஸ்வானுக்கே இருப்பதாக அப்போது புகார் எழுந்தது. இவர்கள் மீது தொடர்ச்சியாக புகார்கள் வந்ததையடுத்து கடந்த ஆண்டே இந்த மூன்று பேரின் பதவிகளும் வரிசையாகப் பறிக்கப்பட்டன. மேலும் அதிமுகவினருக்கு அரசு வேலைகள் ஒதுக்கியது போன்ற செயல்பாடுகள் மஸ்தான் மீது உள்ளூர் திமுக நிர்வாகிகளுக்கு அதிருப்தியை உண்டாக்கியது. இது தவிர, இறால் பண்ணையில் பெருமளவு முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.