தவெகவில் நிலவும் குழப்பத்தால் சைலன்ட் மோடில் விஜய்! Vijay | TVK | Karur Stampade | Chennai TVK Offic
தி.மு.க.வுக்கும் த.வெ.க.வுக்கும் இடையே தான் போட்டி என நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், நாமக்கல் கூட்டங்களில் கர்ஜித்த விஜய்க்கு, கரூர் பிரசாரம் பெரிய முட்டுக்கட்டையை போட்டுள்ளது. அங்கு நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த சம்பவம், அவருடைய வேகமான அரசியலுக்கு பெரிய தடையை ஏற்படுத்தி விட்டது. செப்டம்பர் 27ல், கரூரில் நடந்த சம்பவத்துக்குப் பின், ஒரு மாதமாகியும், விஜய் தன்னுடைய வீடு, பனையூர் அலுவலகத்தை தாண்டி, வேறு எங்கும் தலைகாட்டவில்லை. அதோடு, அவரது கட்சிக்குள்ளும் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதால், அடுத்து என்ன செய்வது என புரியாத மனநிலையில் விஜய் தவிப்பதாக, அக்கட்சியின் மேல் மட்டத் தலைவர் ஒருவர் கூறினார். அவர் கூறியதாவது: விஜய்க்கு கட்சித் துவங்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததும், அதற்கு உரமூட்டி உறுதுணையாக இருந்தவர், புதுச்சேரியைச் சேர்ந்த ஆனந்த். புதுச்சேரியில் எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் அரசியல் அனுபவத்தை பார்த்து, கட்சியில் தனக்கு அடுத்த இடமான பொதுச்செயலர் பதவியில் ஆனந்தை நியமித்தார். டில்லி தேர்தல் கமிஷனில், கட்சியை பதிவு செய்யும் விஷயத்தில் பெரும் உதவியாக இருந்த அருண்ராஜ் என்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரியையும், விஜய் தன்னுடன் சேர்த்துக் கொண்டார். அவருக்கு கொள்கை பரப்பு பொதுச்செயலர் பதவி வழங்கினார். அதற்கு இணையான தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலராக நியமிக்கப்பட்டு இருப்பவர் ஆதவ் அர்ஜுனா. லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் என்ற அறிமுகத்தோடு, சில ஆண்டுகளுக்கு முன், தி.மு.க. முகாமில் வளைய வந்தவர். கடந்த தேர்தல்களில், தி.மு.க.வுக்காக பல வியூகங்கள் வகுத்துக் கொடுத்தவர். பிரபல வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரை, தி.மு.க.வுக்காக செயல்பட வைத்ததில், ஆதவ் அர்ஜுனாவின் பங்கு முக்கியமானது. ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின், இவருக்கு ஆட்சியில் முக்கியத்துவம் இல்லை என்றதும், அங்கிருந்து விலகினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து, துணை பொதுச்செயலர் ஆனார். அதன்பின் விஜயுடன் நெருக்கமாகி, திருமாவளவனை விஜய் பக்கம் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டார். அதன் காரணமாக, திருமாவளவனுக்கு தி.மு.க. கொடுத்த நெருக்கடியால், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் ஆதவ். உடனே விஜயை சந்தித்து, த.வெ.க.வில் இணைந்தார். அவருக்கு கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதேபோல், த.வெ.க.வின் வியூக வகுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஜான் ஆரோக்கியசாமியும், முக்கிய தலைவர் போல செயல்பட்டு வருகிறார். பா.ஜ, அ.தி.மு.க. என கட்சி மாறி த.வெ.க.வுக்கு வந்திருக்கும் நிர்மல்குமாருக்கு, தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை பொதுச்செயலர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதனால், கட்சியின் முக்கிய ஆலோசனைகளின் போது, அவரும் பங்கெடுக்கிறார். இப்படி த.வெ.க.வில் விஜய்க்கு அடுத்த நிலையில் இருக்கும் இந்த ஐந்து பேரும் தான், கட்சியை நடத்துவதுபோல செயல்படுகின்றனர். ஆனால் ஐவரில் ஒருவர் கூட, அடுத்தவரை ஏற்றுக் கொள்வதில்லை. ஆளாளுக்கு ஒவ்வொரு யோசனையை தெரிவித்து, விஜயை தங்கள் போக்குக்கு இழுப்பதால், அடுத்து என்ன செய்வது என புரியாமல் தவித்து வருகிறார் விஜய். கட்சிக்குள் நடக்கும் பல்வேறு குழப்பங்களுக்கும், இந்த ஐவரின் செயல்பாடுகளே காரணம் என்பதை விஜய் அறிந்து கொண்டாலும், இதை எப்படி அணுகி பிரச்னையை தீர்ப்பது என, புரியாமல் தவித்து வருகிறார். ஆனந்த் பொதுச்செயலராக இருந்தாலும், அவரது செயல்பாடுகள் மற்றும் ஆலோசனைகள் திருப்தி அளிக்காததால், ஆதவ் அர்ஜுனாவிடம் அதிகாரத்தை கொடுக்க, விஜய் விரும்புகிறார். கரூர் பிரச்னையில், உச்ச நீதிமன்றம் வரை சென்று, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வைத்ததில், ஆதவ் நடவடிக்கைகள் விஜய்க்கு திருப்தியாக இருந்ததையடுத்து, அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க, விஜய் முன் வந்திருக்கிறார். இருந்தபோதும், கட்சியின் முன்னணி தலைவர்களின் செயல்பாடுகளால் விரக்தியில் இருப்பதால், அரசியல் ரீதியில் அடுத்தக்கட்ட நகர்வு இன்றி, வீடு மற்றும் அலுவலகத்தில், விஜய் முடங்கி இருக்கிறார், என அந்த மேல்மட்ட தலைவர் கூறினார். #Vijay #TVK #KarurStampade #ChennaiTVKOffice #VijayInKarur #TVKActivities #ChennaiEvents #KarurEvents #PoliticalEvents #TVKRevolution #ChennaiNews #VijaySupport #TamilNaduPolitics #Leadership #VOvresults