லோக்பால் பதிவாளரிடம் பதில் கேட்கிறது சுப்ரீம் கோர்ட் | LOKPAL | High Court | Supreme Court
நீதிபதிகளை விசாரிக்கும் லோக்பால் உத்தரவுக்கு தடை! ஊழல் தொடர்பான புகார்களை விசாரிக்கும் லோக்பால் அமைப்பு, சமீபத்தில் ஒரு உத்தரவு பிறப்பித்தது. இரண்டு வெவ்வேறு ஐகோர்ட் நீதிபதிகள் மீது, ஊழல் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தின்படி ஐகோர்ட் நீதிபதிகள், பொது சேவகர்கள் பிரிவில் வருகின்றனர். அந்த சட்டங்களில் நீதிபதிகளுக்கு எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை. லோக்பால் சட்டத்தின்கீழ், ஐகோர்ட் நீதிபதிகள் குறித்த ஊழல் புகார்களை லோக்பால் விசாரிக்க முடியும் என ஜனவரி 27ல் கூறி இருந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் கருத்தையும் லோக்பால் கேட்டிருந்தது. இந்த விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த், அபய் ஓகா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. “லோக்பால் அமைப்புக்கு இந்த அதிகாரம் கிடையாது,” என மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். தொடர்ந்து லோக்பால் அமைப்பின் உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். இதுகுறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், லோக்பால் பதிவாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணை மார்ச் 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.