பெண் சக்தியை போற்றுவதே வளர்ச்சியின் முதல் படி | PM Modi | Womens day | Navsari | Gujarat
உலகின் மிகப் பெரிய செல்வந்தன் நான் தான்! மகளிர் தின விழாவில் மோடி பெருமிதம் குஜராத்தின் நவ்சாரியில் நடந்த மகளிர் தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். மகளிர் மற்றும் குடும்ப நலம் சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். மத்திய அரசு திட்டங்கள் மூலம் கடன் பெற்று, லட்சாதிபதிகளாக உயர்ந்த பெண் தொழில்முனைவோரை பாராட்டினார். மகளிருக்கான நலத்திட்ட உதவிகளையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். பெண்களை போற்றி மதிப்பதே பாரத்தின் கலாச்சாரம். அந்த வகையில், பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு செய்துள்ளது. கோடிக்கணக்கான பெண்களுக்கு வங்கிக் கணக்கு துவங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் வழங்கி அவர்களை தொழில் முனைவோர் ஆக்கியுள்ளோம். லட்சாதிபதி பெண்களை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க வழி வகை செய்துள்ளோம். பணிபுரியும் பெண்களின் மகப்பேறு கால விடுப்பு 12 வாரங்களாக இருந்தது. அதை 26 வாரங்களாக உயர்த்தினோம். உஜ்வாலா யோஜனா மூலம் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கினோம். முத்தலாக் தடை சட்டத்தால் முஸ்லிம் பெண்களின் வாழ்வு சிறக்க நடவடிக்கை எடுத்தோம். காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதால், அங்குள்ள பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. 2014க்கு பின் மத்திய அமைச்சரவையில் பெண்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. 2019ல் 78 பெண் எம்பிக்களும், 2024ல் 74 பெண் எம்பிக்களும் தேர்வாகியுள்ளனர். மாவட்ட நீதிமன்றங்களில் 35 சதவீத பணியாளர்கள் பெண்களாக உள்ளனர். சில மாநிலங்களில் 50 சதவீத நீதிபதிகள் பெண்களாக உள்ளனர். ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 50 சதவீதத்தை பெண்கள் நிர்வகிக்கின்றனர். விண்வெளி ஆய்வுத் துறையில் இந்தியா புதிய உச்சம் தொட்டு வரும் நிலையில், பெண் விஞ்ஞானிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம், காவல் துறை, நீதித்துறை, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் பெண்களின் சாதனையும், அவர்களின் பங்களிப்பும் அதிகரித்து வருகிறது. கோடிக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகளின் ஆசீர்வாதம் எனக்கு உள்ளது. இந்த ஆசீர்வாதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் நான் உலகின் மிகப் பெரிய செல்வந்தன் என சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன் என பிரதமர் மோடி பேசினார். மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒன்றரை லட்சம் பெண்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பெண் போலீசார் மற்றும் பெண் அதிகாரிகளே மேற்கொண்டனர்.