மகனை எதிர்த்து வழக்கு; ராமதாசுக்கு பின்னடைவு | PMK | ramadoss | anbumani | chennai high court
பாமகவில், நிறுவனர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி இடையே அதிகார சண்டை உச்சத்தில் இருக்கிறது. ஒரே கட்சிக்குள் அப்பா, மகன் இருவரும் தமது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். மாமல்லபுரத்தில் நாளை பாமக பொதுக்குழு நடத்துவதாக அன்புமணி அறிவித்து இருந்தார். இதற்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அப்பா- மகன் இருவரையும் சமரசம் செய்ய நினைத்தார். இருவரையும் நேரில் ஆஜராகுமாறு அழைத்தார். நீதிபதி முன் அன்புமணி ஆஜர் ஆனார். ராமதாஸுக்கு உடல்நிலை சரியில்லாததால், வீடியோ கான்பிரஸ் மூலம் ஆஜரானார். இருவரிடமும் சமரசம் ஏற்படுத்த சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக நீதிபதி பேசினார். நல்ல முடிவுவரும் என பாமகவினர் எதிர்பார்த்து காத்திருந்தனர். இச்சூழலில், அன்புமணி பொதுக்குழு நடத்த தடையில்லை என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு அளித்தார். ராமதாஸின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பாமக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் முறையிடலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார். இது ராமதாஸ் தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிகிறது. சென்னை ஐகோர்ட் அளித்துள்ள தீர்ப்பு, நீதிக்கும், அறத்துக்கும் கிடைத்த வெற்றி என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். தடையில்லை என தீர்ப்பு வந்துள்ளதால், திட்டமிட்டபடி நாளை காலை 11 மணிக்கு மாமல்லபுரத்தில் எனது தலைமையில் பாமக பொதுக்குழு நடக்கும். கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதித்து முடிவெடுப்போம் என்று அன்புமணி கூறியுள்ளார்.