அமைதியுடன் போரை முடிவுக்கு கொண்டு வர ஜெலன்ஸ்கி விருப்பம் | Russia attack in ukraine | Zelenskyy
உக்ரைனில் தொடரும் தாக்குதல் மீட்பு நேரத்திலும் வந்த ஏவுகணை 14 பேர் மரணம்: 30 பேர் படுகாயம் ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளாக நீடிக்கிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் அழைத்து பேசியபோது இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு ஜெலன்ஸ்கியை வழிக்கு கொண்டு வரும் வகையில், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வந்த அனைத்து விதமான ஆயுத உதவிகளையும் தடாலடியாக நிறுத்தி டிரம்ப் உத்தரவிட்டார். உக்ரைனுக்கு இதுவரை அமெரிக்கா வழங்கி வந்த உளவு தகவல்களையும் தடாலடியாக நிறுத்தினார். இது ரஷ்யாவுக்கு இன்னும் சாதகமாக அமைந்துவிட்டது. உக்ரைன் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதலை அரங்கேற்றி உள்ளது. உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொனேட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள டோப்ரோபில்லாவில், ரஷ்யப் படைகள் இரவு முழுவதும் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் 5 மாடிகள் கொண்ட 8 அப்பார்ட்மென்ட் கட்டிடங்கள், ஒரு நிர்வாக கட்டிடம், 30 கார்கள் சேதமடைந்தன. மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்த பிறகும், மீட்பவர்களை வேண்டுமென்றே குறிவைத்து மற்றொரு தாக்குதலை நடத்தினர். இது ரஷ்யர்களால் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு மோசமான, மனிதாபிமானமற்ற மிரட்டல் தந்திரம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டித்திருந்தார். இந்நிலையில் போரை ஒரு நீடித்த அமைதியுடன் விரைவில் முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் எல்லாவற்றையும் செய்யத் தீர்மானித்துள்ளதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அதற்கான பணிகளை அடுத்த வாரம் சவுதி அரேபியா பயணத்துடன் தொடங்குவேன். திங்களன்று பட்டத்து இளவரசரை சந்தித்த பிறகு, செவ்வாய்கிழமை உக்ரைன் அதிகாரிகள் அமெரிக்க குழுவை சந்திப்பார்கள். எங்கள் பக்கம், ஆக்கபூர்வமான உரையாடலுக்கு முழுமையாக உறுதிபூண்டுள்ளோம். தேவையான முடிவுகள், நடவடிக்கைகளைப் பற்றி விவாதித்து உடன்பாடு ஏற்படும் என்று நம்புகிறோம். இந்த போரின் முதல் வினாடியில் இருந்தே உக்ரைன் அமைதியை நாடி வருகிறது. யதார்த்தமான திட்டங்கள் தயாராக உள்ளன. அது விரைவாகவும் சரியாகவும் நகர்வதே முக்கியம் என்றும் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.