உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கையை கடிக்கும் கம்யூனிஸ்ட்: தர்ம சங்கடத்தில் தமிழக அரசு | Samsung India | Chennai | Communist

கையை கடிக்கும் கம்யூனிஸ்ட்: தர்ம சங்கடத்தில் தமிழக அரசு | Samsung India | Chennai | Communist

நிம்மதியா தொழில் நடத்த முடியல! சாம்சங் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவன ஊழியர்கள், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் சங்கம் ஏற்படுத்தினர். மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சிஐடியு இணைவு பெற்றதாக இந்த சங்கம் செயல்பட்டது. ஆனால், இந்த தொழிற்சங்கத்தை சாம்சங் நிறுவனம் ஏற்க மறுத்தது. இது தொடர்பாக 37 நாட்கள் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தரப்பு பலமுறை தலையிட்டு பேச்சு நடத்திய பிறகு தான் தீர்வு ஏற்பட்டது. போராட்டம் முடிவுக்கு வந்து தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்பிய நிலையில், தொழிற்சங்க நிர்வாகிகளாக செயல்பட்ட மூவரை சாம்சங் இந்தியா நிறுவனம் சஸ்பெண்ட் செய்தது. நிறுவன விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை திரும்பப் பெற வலியுறுத்தி சக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்திற்கும், சாம்சங் நிர்வாகத்திற்கும் இடையே கூடுதல் தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் பேச்சு நடத்தப்பட்டது. ஆனால், ஊழியர்கள் மீதான பணியிடை நீக்க நடவடிக்கையை திரும்பப் பெற சாம்சங் நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. நிறுவன விதிமுறைகளை மீறியதாக, மேலும் 18 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, போராட்டத்தை தீவிரப்படுத்த சிஐடியு தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தின் அனைத்து சிப்காட் தொழிற்பேட்டைகளிலும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர். அனைத்து சாம்சங் ஷோரூம்களையும் முற்றுகையிடப் போவதாகவும் அறிவித்துள்ளனர். என்ன நடந்தாலும் குறிப்பிட்ட சில ஊழியர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை ஏற்க முடியாது என சாம்சங் நிறுவனம் உறுதியாக கூறியுள்ளது. அனைத்து ஊழியர்களும் நிறுவனத்தின் கொள்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதனை மீறும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுகவின் கூட்டணி கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது. அதன் தொழிற்சங்கமான சிஐடியு இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்துகிறது. அரசின் செயல்பாடு, சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை விமர்சிக்க தொடங்கியுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் கோபத்தையும், சாம்சங் நிறுவனத்தின் அதிருப்தியையும் ஒரே நேரத்தில் சமாளித்து ஆக வேண்டிய தர்ம சங்கடமான நிலைமைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறிப்பிட்ட சில தொழிலாளர்கள் சட்டவிரோதமாக தொழிற்சாலையில் பணிக்கும், அமைதிக்கும் இடையூறு ஏற்படுத்த முயற்சி செய்தனர் என சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது. நிறுவனத்தின் விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். அதனை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சாலை பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. தொழிலாளர்கள் பாதுகாப்புக்கும், எளிதாக தொழில் செய்யவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ