டிரம்ப்பின் போர் அமைதி திட்டத்தை மாற்ற வேண்டும்: மேக்ரான் | Trump | Emmanuel macron | Ukraine peace
அமைதி வேண்டும் என்பதற்காக சரணாகதி அடைய முடியாது! உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கும் ஐரோப்பா ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் 28 அம்சங்கள் கொண்ட அமைதி திட்டத்தை முன் மொழிந்துள்ளார். ரஷ்யா இதை ஏற்றுக்கொண்டது. உக்ரைன் மறுத்துவருகிறது. ரஷ்யாவின் நீண்டகால கோரிக்கைகளை ஏற்பது போல அமைதி திட்டம் உள்ளது என உக்ரைன் கூறியுள்ளது. ஆனால், வரும் 27ம் தேதிக்குள் அமைதி திட்டத்தை ஏற்காவிட்டால், உக்ரைனுக்கு அளிக்கும் ஆதரவுகளை விலக்கி கொள்ளப்போவதாக அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமைதித் திட்டம் குறித்து பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்துடன், உக்ரைன் பேச்சு நடத்தியது. அதில் உக்ரைனுக்கு ஆதரவான நிலையை ஐரோப்பிய நாடுகள் எடுத்துள்ளன. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறும்போது, அமைதிக்கான சரியான திசையில் செல்லும் முயற்சி நடக்கிறது. இருந்தாலும் இன்னும் இந்த திட்டத்தில் விவாதிக்க வேண்டிய மற்றும் மேம்படுத்த வேண்டிய அம்சங்கள் உள்ளன. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். ஆனால் சரணாகதி அடைய செய்யும் அமைதியாக அது இருக்க கூடாது. உக்ரேனியர்கள் எந்த நிலப்பகுதியை தரத் தயாராக உள்ளனர் என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய முடியும். இந்த அமைதி திட்டம் ரஷ்யர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். அதையேதான் உக்ரைனும், ஐரோப்பிய நாடுகளும் ஏற்க வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் இல்லை. உக்ரைனுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்புடையதாக அமைதித் திட்டம் மாற்றப்பட வேண்டும். ரஷ்யாவுடன் அமைதி ஏற்பட்டாலும்கூட, உக்ரைனின் முதல் பாதுகாப்பு பணி, ராணுவத்தை பலப்படுத்துவதாகவே இருக்கும். அதற்கு எந்த கட்டுப்பாடும் இருக்க கூடாது. ஐரோப்பிய நாடுகளில் ரஷ்யாவின் சொத்துகள் முடக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றை என்ன செய்வது என்பதை ஐரோப்பாதான் முடிவு செய்யும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.