மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன Union Budget 2025 | Nirmala Seetharaman| Modi| Budget
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில், விவசாயம், தொழில் வளர்ச்சி, இளைஞர் நலன், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கான முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. விசாயிகளுக்கு கிஷான் கிரெடிட் கார்டு பயிர் கடன் வரம்பு3 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாய பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், துவரை, உளுந்து, மசூர் பருப்பு வகைகளின் உற்பத்தியை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். பழங்கள், காய்கறிகளின் நுகர்வு அதிகரித்துள்ளதால், அவற்றின் விளைச்சலை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தனம், தானிய கிஷான் திட்டத்தில் வேளாண் உற்பத்தி குறைவாக உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் வரிவிதிப்பு, நகர்ப்புற மேம்பாடு, சுரங்கம், நிதித்துறை, மின்சாரம் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பு ஆகிய ஆறு துறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்படும். ஜல் ஜீவன் திட்டத்தில் நாட்டின் 80 சதவீத கிராமங்களில் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மீதமுள்ள 20 சதவீத்தையும் பூர்த்தி செய்து, 100 சதவீதம் குழாய் குடிநீர் வினியாகத்தை உறுதி செய்யப்படும். உடான் திட்டத்தில் 88 நகரங்களில், 619 புதிய வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. சிறிய நகரங்களில் ஹெலிகாப்டர் போக்குவரத்துக்கு ஹெலிபேடுகள் அமைக்கப்படும். புதிதாக 120 ஏர்போர்ட்டுகள் அமைக்கப்படும். இதன் மூலம் கூடுதலாக 4 கோடி பேர் பலன் அடைவர். 2025-26ஆம் நிதியாண்டில் நாட்டில் 200 புற்றுநோய் மையங்கள் அமைக்கப்படும். புற்றுநோய் உள்ளிட்ட 36 வகை உயிர் காக்கும் மருந்துகளுக்கு இறக்குமதி வரி ரத்து செய்யப்படும். காப்பீட்டுத்துறையில் அன்னிய நேரடி முதலீடு 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்படும். பீகார் மாநிலத்தில் உணவுப் பொருள் தொழில்நுட்பம் குறித்த உயர்கல்வி ஆய்வு நிறுவனம் அமைக்கப்படும். தாமரை விதை உற்பத்திக்காக பீகாரில் தனி வாரியம் அமைக்கப்படும். பாட்னா ஐஐடி, ஏர்போர்ட் மேலும் விரிவுபடுத்தப்படும். பேட்டரி வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் வகையிலும், பசுமை எரிசக்தியை ஊக்குவிக்கும் வகையிலும், மொபைல் போன் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரிகள் மீதான வரி ரத்து செய்யப்படும். ஜவுளித்துறையை மேம்படுத்த பின்னலாடை நிறுவனங்களுக்கு சிறப்பு வரிச் சலுகை வழங்கப்படும். நகர்ப்புற மேம்பாட்டிற்காக 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். எளிமையான புதிய வருமான வரி சட்ட திருத்த மசோதா பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்படும். மருத்துவ கல்லூரிகளில் புதிதாக 10 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள் உருவாக்கப்படும். ஆண்டு தோறும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அடுத்த 5 ஆண்டுகளில் 75 ஆயிரம் இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்கவும், கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் முறையில் பாட புத்தகங்கள் வழங்கப்படும். விவசாயம் உட்பட பல்வேறு துறைகளில் AI தொழில்நுட்பம் பயன்பாடு அதிகரிக்கப்படும். புதிய வருமான வரி கொள்கையின் கீழ் 7 லட்சம் ரூபாயாக இருந்த வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.