சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த விஜய் வலியுறுத்தல் | Vijay | TVK | Caste Survey
உங்களால மட்டும் ஏன் முடியல? சமூக நீதி வேடம் கலைகிறது! தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை அரசு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பாமக, நாம் தமிழர் போன்ற பல கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அந்த வரிசையில் நடிகர் விஜயின் தவெகவும் கைகோர்த்துள்ளது. இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை; முதல் மாநாட்டில், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தேன். செயற்குழு கூட்டத்திலும் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றினோம். மாநில அரசுகளும் தங்களது மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்த அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் உள்ளது. அதன் படிதான் பீகார், கர்நாடகாவில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி, புள்ளி விவரங்களைக் கையில் வைத்துள்ளனர். இப்போது தெலங்கானா அரசும் வெறும் ஐம்பதே நாட்களில் இந்த ஆய்வை நடத்தி முடித்திருக்கிறது. ஒருபடி மேலே சென்று, அந்த ஆய்வு அறிக்கை மீது சட்டசபையின் சிறப்பு அமர்வுக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கவும் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் உள்ள சில திட்டங்களை, மற்ற மாநில அரசுகள் பின்பற்றுகின்றன என தமிழக ஆட்சியாளர்கள் பெருமை பேசுகின்றனர். ஆனால் சமூக நீதிக்கு அடித்தளம் அமைக்கும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்த தயங்குவது ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை. தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே வருகிறார்கள். தங்களின் சுயலாபத்திற்காக மட்டுமே ஈவெராவை பற்றி பெருமை பேசும் இப்போதைய ஆட்சியாளர்கள், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்ற வாதத்தையே முன்வைத்து வருகின்றனர். இவர்களின் பொய்வேடம் தானாகவே கலையும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் விஜய் கூறி உள்ளார்.