உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அனல் பறக்கும் விவாதத்திற்கு தயாராகும் எதிர்க்கட்சிகள் Waqf amendmet bill | INDIA Alliance

அனல் பறக்கும் விவாதத்திற்கு தயாராகும் எதிர்க்கட்சிகள் Waqf amendmet bill | INDIA Alliance

பார்லியில் தாக்கலாகும் வக்பு மசோதா எம்பிக்களுக்கு பறந்த கொறடா உத்தரவு பரபரக்கும் பார்லிமென்ட் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் புதனன்று தாக்கலாக உள்ளது. மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் கிரண் ரிஜிஜு மசோதாவை தாக்கல் செய்கிறார். இந்த மசோதா ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் பார்லிமென்ட் கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், பாஜ கூட்டணி கட்சிகள் முன்வைத்த 14 திருத்தங்கள் மட்டும் ஏற்கப்பட்டன. இப்போது மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ள வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா கடும் பேசு பொருளாகி உள்ளது. இதனால் மசோதா மீது பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் விவாதிக்க 8 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் நேரம் தேவைப்பட்டால் அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்பிக்களின் விவாதத்திற்கு பின், சட்ட திருத்த மசோதா மீது ஓட்டெடுப்பு நடக்கும். எனவே, பாஜ எம்பிக்கள் அனைவரும் தவறாமல் நாளை லோக்சபா கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 2ம் தேதி லோக்சபாவில் முக்கிய நிகழ்வு நடக்க உள்ளது. பாஜ எம்பிக்கள் எவரும் ஆப்சென்ட் ஆகாமல் சபை நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என, பாஜ லோக்சபா கொறடா சஞ்சய் ஜெய்ஸ்வால் அனைவருக்கும் கடிதம் எழுதியுள்ளார். இதே போல், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை கடுமையாக எதிர்க்கும் சமாஜ்வாதி கட்சியும் அதன் எம்பிக்களுக்கு கொறடா மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு நிறைவேற்ற நினைக்கும் மசோதாவுக்கு எதிராக ஓட்டளிக்க ஏதுவாக, சமாஜ்வாதியை சேர்ந்த அனைத்து எம்பிக்களும் புதன் லோக்சபா கூட்டத்தில் நாள் முழுதும் பங்கேற்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. விதிகளின்படி கொறடா உத்தரவை மீறும் எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். எனவே முக்கிய விவாதங்கள் மீதான ஓட்டெடுப்பு, அரசு, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஆகிய சமயங்களில் அணி மாறி ஓட்டளிப்பதை தடுக்கும் வகையில் கொறடா உத்தரவு பிறப்பிப்படுவது வழக்கம். அந்த வகையில் புதனன்று தாக்கலாகும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஓட்டளிக்க வசதியாக அந்தந்த கட்சிகளின் எம்பிக்களுக்கு கொறடா மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதனன்று சபை நடவடிக்கைகளை எதிர்கொள்வது, விவாதத்தில் எடுத்து வைக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து இண்டி கூட்டணி கட்சி தலைவர்கள் டில்லியில் ஒன்று கூடி விவாதித்தனர். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை அனைவரும் ஒருமனதாக எதிர்ப்பது என முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். ஒத்த கருத்துள்ள கட்சிகளையும் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்குமாறு இண்டி கூட்டணி சார்பில் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !