இரவில் நடந்த தீ விபத்து; பின்னணியில் பல தகவல்! | Jhansi hospital Fire | Uttar Pradesh incidenet
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் மகாராணி லட்சுமிபாய் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்குள்ள குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று இரவு 10.30 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி மருத்துவமனை முழுக்க புகை மண்டலமாக காட்சியளித்தது. நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அவசரமாக மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். புதிதாக பிறந்த குழந்தைகளும் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தனர். ஜன்னலை உடைத்து அதன் வழியாக 37 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சோக நிகழ்வாக 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி இறந்தது. 17 குழந்தைகள் தீக்காயமுற்றது. 6 தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது என போலீசார் சந்தேகப்படுகிறார்கள். தீயை அணைக்கும் சிலிண்டர்கள் காலாவதியாக இருந்தது. விபத்து ஏற்பட்ட பிறகு எச்சரிக்கை மணியும் ஒலிக்கவில்லை என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. நிர்வாகத்தின் கவனக்குறைவே காரணம் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து உள்ளன. கமிஷனர் மற்றும் டிஐஜி அடங்கிய விசாரணை குழு சம்பவம் குறித்து விசாரித்து சனிக்கிழமை மாலைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார். இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என யோகி அறிவித்துள்ளார். இந்த சம்பவம் நெஞ்சை பதறவைப்பதாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனையில் உபி துணை முதல்வர் பிரஜேஷ் பதக் ஆய்வு செய்தார்.