கணவனை தீர்த்துக்கட்ட மனைவி போட்ட திட்டம்: பரபரப்பு தகவல்கள் husband wife issue illegal relationshi
திருநெல்வேலி அருகே கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் 42. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி முத்துலட்சுமி 34. இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. 3 மகள்கள்,ஒரு மகன் உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே முத்துலட்சுமிக்கும், பாலசுப்பிரமணியனுக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. வாய்த்தகராறு முற்றியதில் முத்துலட்சுமியை பாலசுப்பிரமணியன் அடித்துள்ளார். இதனால் ஒரு மாதத்துக்கு முன் முத்துலட்சுமி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கணவன் மீது புகார் அளித்தார். 4 குழந்தைகளின் இருக்கிறார்கள்; அவர்களுக்காக பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என போலீசார் 2 பேரையும் அழைத்து விசாரணை நடத்தி புத்திமதி சொல்லி சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து 4 நாட்களுக்கு முன் முத்துலட்சுமி மீண்டும் கணவன் வீட்டுக்கு வந்தார். நேற்று காலை வீட்டில் பாலசுப்பிரமணியன் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது முத்துலட்சுமி கொதிக்கும் எண்ணெயை பாத்திரத்தில் கொண்டு வந்து கணவர் மீது ஊற்றினார். பாலசுப்பிரமணியன் அலறினார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியனை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அடிவயிறு முழுமையாக வெந்து போயிருந்தது. காயத்தின் தன்மை 60 சதவீதத்துக்கு மேல் இருப்பதால், நிலைமை சீரியசாக உள்ளது. ஆனாலும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சிவந்திபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா வழக்குப்பதிவு செய்து முத்துலட்சுமியிடம் விசாரணை நடத்தினார். சின்ன குடும்பப்பிரச்னைக்கா கணவனுக்கு இவ்வளவு கொடூர தண்டனையை முத்துலட்சுமி கொடுத்தார்? என குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். பகீர் தகவல்கள் வெளியானது. பாலசுப்பிரமணியனுக்கும் அதே பகுதியைச்சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது. ஆட்டோவில் அந்தப் பெண்ணுடன் ஜாலியாக ஊர் சுற்றி வந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் மூலம் இந்த விஷயம் முத்துலட்சுமிக்கு தெரிய வந்தது. இதனால் வீட்டுச் செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை. பிள்ளைகளை படிக்க வைக்க முத்துலட்சுமி கஷ்டப்பட்டார். குழந்தைகளின் நலன் கருதி தொடர்பை விட்டு விடும்படி கணவனிடம் கூறியுள்ளார். பாலசுப்பிரமணியன் கேட்கவில்லை. தன் தவறை மறைக்க, நீ மட்டும் ஒழுங்கா என கேட்டு மனைவியை திட்டி வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தினம் தினம் சண்டை நடந்து வந்தது. ஒரு நாள், வாய்த்தகராறு முற்றி முத்துலட்சுமியை பாலசுப்பிரமணியன் கடுமையாக தாக்கியுள்ளார். ஆவேசமான முத்துலட்சுமி, கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். குழந்தைகளுக்காக மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாக கூறி, தாய் வீட்டில் இருந்து 4 நாளுக்கு முன் கணவன் வீட்டுக்கு திரும்பி வந்தார். 2 நாளுக்கு முன் 2 லிட்டர் சமையல் எண்ணெய் வாங்கினார். நேற்று அதிகாலை 3 மணிக்கு எழுந்து, பெரிய பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி கொதிக்க வைத்தார். எண்ணெய் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் பாத்திரத்தை தூக்கி வந்து தூங்கிக் கொண்டிருந்த கணவனின் அடிவயிற்றுப்பகுதியில் எண்ணெயை ஊற்றியுள்ளார். திட்டம் போட்டு கணவனை கொடூரமாக கொல்ல முயன்றது தெரிய வந்துது. அதைத் தொடர்ந்து, போலீசார் முத்துலட்சுமியை கைது செய்து திருநெல்வேலி மகளிர் சிறையில் அடைத்தனர். அப்பா மருத்துவமனையில் சீரியசாக உள்ள நிலையில், அம்மாவும் சிறையிலடைக்கப்பட்டார். இதனால் 4 குழந்தைகளும் கதறி அழுகின்றன. உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர். கள்ளத் தொடர்பு பிரச்னையில் கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை மனைவி ஊற்றிய சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.