மொத்தமாக உருக்குலைந்த கார்: சரிந்த 4 உயிர்கள் | Accident | Nellai | Tirunelveli
திருநெல்வேலி வள்ளியூர் அருகே தளபதி சமுத்திரம் கீழுர் தேசிய நெடுஞ்சாலையில் நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் இரண்டு வயது குழந்தை, இரு பெண்கள் உள்பட 4 பேர் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்தனர். வள்ளியூர் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பு சுவரின் மீது மோதி எதிர் திசையில் பாய்ந்தது. அப்போது நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி வந்த மற்றொரு கார் மீது மோதியது. இதில் நகர்கோவில் நோக்கி சென்ற கார் முற்றிலுமாக உருக்குலைந்து போனது. சீட்கள் சேதமாகி வளைந்து கார் உள்ளே இருந்தவர்கள் ரோட்டில் தூக்கி வீசப்பட்டு கிடந்தனர். கோர விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் ஸ்பாட்டிலேயே இறந்தனர். காயமடைந்த 6 பேர் நெல்லை அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டனர். நாங்குநேரி போலீஸார் இறந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஆஸ்பிடலில் காயங்களுடன் அட்மிட் செய்யப்பட்ட பெண் இறந்தார். இதனால், இறப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. விபத்து நடந்த இடத்தில் நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்ன குமார் விசாரணை மேற்கொண்டார். 2 மணி நேரத்துக்கும் மேலாக திருநெல்வேலி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து நாங்குநேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்தவர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடக்கிறது.