மக்களின் வலியை புரிந்து கொள்ளாத ஸ்டாலின்: எதிர்கட்சிகள் தாக்கு Ungaludan Stalin | Palanisami | ADMK
தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடக்கிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் பூவந்தி, கீழடி, கொந்தகை முதலான கிராமங்களில் இந்த முகாம்கள் சமீபத்தில் நடந்தன.
இந்த முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட் மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் வீசப்பட்டு இருந்தன. போலீஸார் அவற்றை சேகரித்து விசாரிக்கின்றனர்.
இதை, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டித்தார்.
எதிர்க்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் வாங்கிய மனுக்கள் இன்னும் பெட்டிகளிலேயே கிடக்கின்றன.
நீட் ஒழிப்பு மாநாடு நடத்தி திமுக அரசு வாங்கிய கையெழுத்து படிவங்களும் காற்றில் பறக்க விடப்பட்டு குப்பையாக்கப்பட்டன.
இப்போது உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் அஸ்தி கரைப்பது போல திருப்புவனம் வைகையாற்றில் குப்பையாக வீசப்பட்டுள்ளன.
மக்கள் வலிகளை புரிந்து கொள்ள முடியாமல், உங்களுடன் ஸ்டாலின் என்ற கண்துடைப்பு நிகழ்ச்சியை அரங்கேற்றும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலையும் இதை கண்டித்துள்ளார்.
திட்டங்களுக்கு அலங்காரமான பெயர்களை வைப்பதும், வரிப்பணத்தை விளம்பரத்துக்கு வீணாக்குவதும் திமுக அரசின் அடையாளமாக மாறிவிட்டது.
சிவகங்கை மாவட்டத்தில், வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதன் மூலம் இன்னொரு முறை இது அம்பலப்பட்டு இருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சிவகங்கை மாவட்ட கலெக்டர் பொற்கொடி, ஆற்றில் மனுக்கள் கிடைத்ததாக வெளியான தகவல்கள் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டோர் மீது நடவடிக்கை எடுப்போம் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.