செய்தி சுருக்கம் | 01 PM | 08-10-2024 | Short News Round Up | Dinamalar
விமானப்படை வீரர்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 8ம் தேதி விமானப்படை தினமாக கொண்டாடப்படுகிறது. 92வது விமானப்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து பதிவில், துணிச்சல் மிகுந்த நம் வீரர்களுக்கு விமானப்படை நாள் வாழ்த்துகள். வீரத்துக்கும், தொழில்முறை நடவடிக்கைகளுக்கும் சான்றாக நமது விமானப்படை விளங்குகிறது. நம் நாட்டை பாதுகாப்பதில் அவர்களின் பங்கு அளப்பரியது என கூறியுள்ளார். விமானப்படை தினத்தில், இந்திய விமானப்படையின் துணிச்சலான ஆண்களுக்கும், பெண்களுக்கும் மரியாதையுடன் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, எங்கள் வானத்தை பாதுகாப்பாகவும், எங்கள் உற்சாகத்தை உயர்வாகவும் வைத்திருக்கிறது. உங்களது தன்னலமற்ற சேவைக்கும், தியாகத்திற்கும் நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம், ஜெய்ஹிந்த் என கூறியுள்ளார். சேலம் கந்தம்பட்டியில் சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது . இங்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரியாக பணியாற்றி வருபவர் சதாசிவம் (வயது 58). ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் சம்பவங்கள் அதிகளவில் நடப்பதால், அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் திடீரென ரெய்டுக்கு செல்வது வழக்கம். இதனால் சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரை இரு தினங்களுக்கு முன் சதாசிவம் தொடர்பு கொண்டார். ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு ரெய்டுக்கு வரும் முன் முதலிலேயே சொல்லிவிட்டால் வசதியாக இருக்கும்; உஷாராகி விடுவோம் என கூறினார். அப்படி முன்கூட்டியே சொன்னால் மாதம் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து விடுகிறோம். அதற்கு அட்வாஸ்சாக ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன். டீல் ஓகேவா? என சதாசிவம் கேட்டார். இதற்கு ஒப்புக்கொண்டது போல ரவிக்குமார் நடித்தார். ரெய்டு வருவதற்கு முன் தகவல் கொடுப்பதாகவும் ஆர்டிஓ சதாசிவத்திடம் உறுதியளித்துவிட்டு சென்றார். ஆர்டிஓ சதாசிவம் தனக்கே லஞ்சம் கொடுப்பதாக கூறியது பற்றி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கிருஷ்ணராஜிடம் ரவிக்குமார் புகார் சொன்னார். சதாசிவத்தை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டம் போட்டனர். அதன்படி, நேற்று இரவு சேலம் கரூப்பூர் அருகே ஒட்டல் ஒன்றுக்கு வந்து 1 லட்சம் பணத்தை வாங்கிக்கொள்வதாக, சதாசிவத்திடம் ரவிக்குமார் கூறியுள்ளார். ஓட்டலுக்கு வந்த ரவிக்குமாரிடம் சதாசிவம் ஒரு லட்சம் ரூபாயை கொடுத்தார். அங்கு ஏற்கனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சதாசிவத்தை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் சதாசிவத்தை கைது செய்து லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பிறகு, சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.